பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

மேல் ஏறி 'ஜிங்ஜிங்' என்று குதிக்கத் தொடங்கிவிட்டது. வள்ளிநாயகி எழுந்து வந்து, “இப்படித் தூங்காமல் ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டிருந்தால், காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது. புறப்படுவதற்கு நேரமாகிவிடும்" என்று எச்சரிக்காவிட்டால் அவர்கள் தூங்கியேயிருக்க மாட்டார்கள். அத்தனை மகிழ்ச்சி அவர்களுக்கு.


3

டுத்த நாள் காலையில் தத்துவப் பேராசிரியர் வடிவேலின் மாளிகையில் ஒரே பரபரப்பாக இருந்தது. வஞ்சியூர் அங்காளம்மன் திருவிழாவிற்குப் புறப்படுவதற்காக அவசரம் அவசரமாக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எல்லாரும் பறந்து பறந்து ஒவ்வொரு வேலையையும் கவனித்தார்கள். பத்து நாள்களுக்கு வேண்டிய துணிமணிகளையும் மற்றச் சாமான்களையும் பெட்டிகளில் அடுக்கிவைப்பதில் தங்கமணி, சுந்தரம். கண்ணகி ஆகிய மூவரும் ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொண்டிருந்தனர். ஜின்கா தங்கமணிக்குச் சட்டை, சீப்பு முதலியவைகளை ஓடிஓடி எடுத்துக் கொடுத்துக்கொண்டிருந்தது. கண்ணகி ஒரு சிறு கைப்பெட்டிக்குள்ளே தனக்கு வேண்டிய குங்குமம், பவுடர் முதலியவைகளை வைத்திருந்தாள். அந்தப் பெட்டியைத் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஜின்கா காரை நோக்கி ஓடிற்று. பெட்டியைக் காரில் வைத்துவிட்டு வருவதுதான் அதன் நோக்கம். ஆனால், அது போன அவசரத்தில் கைப்பெட்டி தானாகவே திறந்து, அதிலிருந்த பவுடர் டப்பா அதன் தலைமேல் விழுந்தது. ஜின்காவின் உடம்பு முழுவதும் டப்பாவிலிருந்த வாசனைப்பொடி சிதறி விழவே. அந்தக் குரங்கு விநோதமாகக் காட்சி அளித்தது. “அண்ணா , என் பவுடர் எல்லாம் போச்சு” என்று கண்ணகி அழாத குறையாகக் கூவினாள்.

"ஜின்காவிற்குத்தான் பவுடர் ஜோராக இருக்கிறது. இனிமேல் உனக்கு அது வேண்டாம்" என்று சுந்தரம் நகைத்தான்.