பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

வேண்டும்" என்று அவன் இரங்கிய குரலிலே ஜின்காவைப் பார்த்துக் கூறினான்.

“அண்ணா, ஒரு தேங்காயை உடைத்து ஜின்காவிற்குக் கொடுக்கட்டுமா? பாவம், ரொம்பக் களைத்துப்போயிருக்கிறது" என்று கண்ணகி பரிவோடு கேட்டாள். ஆனால், ஜின்கா உடனே செயலில் இறங்கத் துடித்துக்கொண்டிருந்தது.

"தங்கமணியைவிட ஜின்காவிற்குத்தான் பரிசலைக் கரைக்குச் சேர்க்க அவசரம். ஆனால் அதற்குத் துடுப்புப் போடத் தெரியுமா என்ன?" என்று சுந்தரம் புன்முறுவல் செய்தான்.

“துடுப்புப் போடத் தெரியாது. ஆனால், ஜின்கா பரிசலைக் கரைக்குச் சேர்க்கப்போகிறது பார்" என்று கூறிக் கொண்டே ஜின்காவின் கையிலே கயிற்றின் ஒரு நுனியை எடுத்துத் தங்கமணி கொடுத்தான். அது கயிற்றைப் பற்றிக் கொண்டே ஆற்றில் குதித்துக் கரையை நோக்கி நீந்தத் தொடங்கியது. "டேய் சுந்தரம்! நீ துடுப்பைப் போடு" என்று கூறிக்கொண்டே தங்கமணி தன் கையில் கயிற்றைப் பற்றிக் கொண்டு அதைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆற்று நீரில் தளர்த்திவிட்டுக்கொண்டிருந்தான். நல்லவேளையாகக் கயிறு போதுமான அளவு நீளமாக இருந்தது. அதனால் ஜின்கா ஆற்றின் கரைக்குக் கயிற்றோடு போய்ச் சேர முடிந்தது.

ஆனால் அதனால் பரிசலை இழுத்துப் பிடிக்க முடியாது. அது இழுத்துப் பிடிக்க முயன்றிருந்தால் ஆற்று வெள்ளத்தின் வேகம் அதையும் சேர்த்து இழுத்துக்கொண்டுதான் போயிருக்கும். ஜின்கா பரிசலோடு கூடவே கரையிலே கொஞ்ச தூரம் ஓடிற்று. தங்கமணி பல வகையாகக் குரலெழுப்பி அதற்குச் சமிக்கை செய்துகொண்டே இருந்தான். அதைப் புரிந்து கொண்டு ஜின்கா நடந்தது. கரையோரமாக ஒரு மரம் இருந்தால் போதும். அதை எதிர்பார்த்து ஜின்கா பரிசலுக்கு நேராகக் கரையில் ஓடலாயிற்று. ஓரிடத்திலே ஒரு பெரிய மரக் கூட்டம் கரையின் ஓரத்திலேயே இருந்தது. அதை நோக்கி ஆவலோடு ஜின்கா ஓடியது. ஒரு மரத்தின் அடிப்பாகத்திலே அது கயிற்றை இரண்டு மூன்று முறை சுற்றும்படியாக வேகமாகச் சுற்றி சுற்றி ஓடியது. இதைத்தான் தங்கமணி