பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

1. தோற்றுவாய்

சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும் தமிழ் மொழியில் தனித்தன்மை பெற்றுள்ள, தனிச்சிறப்புமிக்க பேரிலக்கியப் படைப்புகளாகும் தலைசிறந்த காப்பியமும் பிரபந்தமுமாகும் சிலப்பதிகாரக் காப்பியம் சிறப்புமிக்க மனிதப்பிறவியைத் தெய்விக நிலைக்கு உயர்த்தி நம்மை வழிபாடு செய்ய வைக்கிறது. திவ்யப்பிரபந்தப் பாசுரங்கள் தெய்வத்தையே மனித வடிவில் பாராட்டி, சீராட்டிப் பக்தி செலுத்தி நம்மையும் பக்தி செலுத்த வைத்துப் பரவசமூட்டச் செய்கிறது.

'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு" என்று பாரதி இந்தத் தலைசிறந்த காப்பியத்தைப்பற்றிப் பெருமைபடக் கூறுகிறார். இன்னும் ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்றும் பாரதி உறுதிப்படுத்திப் பேசுகிறார். இன்னும் சிலப்பதிகாரச் செய்யுளின் பெருமையைப் போற்றி மேலும் பேசுகிறார்.

"சிலப்பதிகாரச் செய்யுளைக் கருதியும் திருக்குற ளுறுதியும், தெளிவும், பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும், எல்லையொன்றின்மை எனும் பொருளதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும் முன்பு நான் தமிழச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதி கொண்டிருந்தேன் என்று பாரதி மேலும் குறிப்பிட்டுப் பெருமைப்படுகிறார்.