பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

தமிழ்ச்சாதிக்கு அமரத் தன்மையளிக்கும், சாகா வரம் அளிக்கும் நூல்களுள் ஒன்றாகச் சிலப்பதிகாரத்தைக் குறித்துப் பாரதி பெருமைப்படுவதைக் காண்கிறோம். இன்னும் பாரதி தமது சுயசரிதைப் பாடல்களில்,

"கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்,

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்

தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்” என்றெல்லாம் குறிப்பிடுகிறார்.

தமிழகத்தின் ஒற்றுமையை மனத்தில் வைத்து மூன்று குலத் தமிழ் மன்னர்களையும் இளங்கோவடிகள் சிறப்பித்துப் பாடுகிறார். அவர்களுடைய மேலான ஆட்சியையும், வீரத்தையும், தமிழை வளர்த்த சிறப்புகளையும், ஆரியத்திற்கு நிகராகத் தமிழை உயர்த்திய பெருமைகளையும் தமிழகத்தின் வளத்தையும், உற்பத்தி வளர்ச்சியையும், வாணிபப் பெருக்கத்தையும், ஆடல் பாடல் சிறப்புகளையும் இளங்கோவடிகள் தமது காப்பியத்தில் விரிவுபட கூறுகிறார்.

அதை நினைத்தே பாரதியார் தமது தமிழ்த்தாய்பற்றி பாடலில்,

“ மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை

மூண்டநல் லன்பொடு நித்தம் வளர்த்தார் ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்

ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்” என்றும், தமது சுயசரிதைப் பாடலில்,

“ பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்

பார வளித்ததும் தர்மம் வளர்த்ததும்” என்றும் பாடுகிறார்.

கம்பனும் வள்ளுவனும் சேரன் தம்பியும் பாரதியின் உள்ளத்தை அள்ளியதைப் போலவே, ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தப் பாடல்களும் பாரதியின் உள்ளத்தில் பெரும் அளவில் ஆழ்ந்த தாக்கங்களை உண்டாக்கியிருக்கின்றன. ஆழ்வார்களின் வழியில் பாரதி, கண்ணனைப் பல வேறு வடிவங்களில் பலவேறு உறவுகளை வைத்துப் பாடுகிறார்.