பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

தேவையான அவசியமான பல வேறு வேலைகளையும், பணிகளையும், தொழில்களையும் செய்யும் உழைக்கும் மக்களாகப் பல வேறு துறைகளிலும், இடங்களிலும் பாடுபடும் மக்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய குறைகள், கஷ்டங்கள், துன்ப துயரங்களைத் தணிக்கவும் போக்கவும் இந்த உலகிலேயே அவர்களுடைய வாழ்க்கையிலேயே வழிகாண வேண்டும். அவர்களுடைய நலன்களைக் காக்க அவர்கள் அனைவருக்கும் நல்வாழ்வளிக்க அவர்களுக்குப் போதுமான உணவு, உடை உறைவிடம், கல்வி அறிவு, விளையாட்டு வசதி, மனமகிழ்ச்சிக்கான ஆடல்பாடல் முதலியன கிடைக்கவே உலகில் ஏற்பட்ட அத்தனை அமைப்புகளும் பாடுபட்டிருக்கின்றன; மேலும் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றன.

இதையே, "நான் எந்தக் குலத்திலும் பிறக்கவில்லை. எந்தக் கலையும் பயிலவில்லை. என் புலன்களை வென்று வாழும் சக்தி எனக்கில்லை. பொறியில்லாத சாதாரண மனிதனாகவே நான் உள்ளேன். எனக்கு உன்னையன்றி, எனது நல்வாழ்விற்கு உனது பாதங்களன்றி வேறு வழியொன்று மில்லை என்னும் பரந்த பொருளில் திருமழிசையாழ்வார் மிகவும் உருக்கமான தத்துவஞானப் பொருள்மிக்க பாசுரங்களைத் திருச்சந்த விருத்தத்தில் பாடுகிறார் :

"குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன், நலங்களாய நற்கலைகள் நாலிலும் நவின்றிலேன் புலன்களைந்தும் வென்றிலேன் பொறியிலேன் புனிதநின் இலங்குபாத மன்றிமற்றொர் பற்றிலேன்எம் ஈசனே" என்று ஆழ்வார் பாடுவதைக் காணலாம்.

மேலும் அச்சம், நோய், அல்லல், பல்பிறப்பு, மூப்பு ஆகியவைபற்றிய சிந்தையும் கவலையும் நீங்க வேண்டும் என்று தங்கள் பாசுரங்களில் குறிப்பிடுகிறார்கள்.

ஆழ்வார்களுள் தொண்டரடிப்பொடியாழ்வார் தனிச் சிறப்புமிக்க ஆழ்வாராவார். அவர் தமது பெயரையே தொண்டரடிப்பொடி என்று மாற்றிக்கொண்டவர். அவருடைய திருமாலைப் பாசுரங்களும் தனித் தன்மையும் தனிச் சிறப்பும் சமூகத் தன்மையும் கொண்டவைகளாகும்.