பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

107


முழுமுதற்பொருள் ஒன்றேயென்னுந் தெளிவுடையராய் அதனை அன்பினால் வழிபடுதல் மெய்யுணர்வுடையார் மேற்கொள்ளும் பெருந்தெய்வ வழிபாடெனப்பெறும்.

தெய்வம் ஒன்றே என்னுந் தெளிவுநிலை மக்கட் சமுதாயத்தில் உருவாவதற்குமுன் அணங்கு, பேய், பூதம் முதலாக அஞ்சுதற்குரியன எல்லாவற்றையும் தெய்வமெனக் கொண்டு வழிபடும் பொதுநிலையே உலகிற் பலவிடங் களிலும் பரவியிருந்தது. இயற்கைப் பொருள்களின் வழியாகவும் ஏனையுயிர்த்தொகுதிகளின் வழியாகவும் உலகத்து நிகழும் பல்வேறு நிகழ்வுகளை மட்டும் கண்டு அந்நிகழ்வுகளுக்குரிய உண்மையான காரணங்கள் இவையென உய்த்துணரும் உணர்வு நிரம்பப் பெறாத நிலையில், கட்புலனாக நிகழும் இயற்கையிடையூறுகளை வெவ்வேறு தெய்வங்களின் விளைவுகளாகக் கருதித் தம் உள்ளத்தே தோன்றிய அச்சங் காரணமாகவும் அத் தெய்வங்களின் அருளால் தீமைகளைப் போக்கி விரும்பிய நலங்களைப் பெறுதல் வேண்டும் என்னும் ஆசை காரணமாகவும் தொல் பழங்காலத்தில் வாழ்ந்த மக்கட் குழுவினர் தாம் தாம் வாழ்ந்த இயற்கைச் சூழல்கட் கேற்பவும் ஒளிபெறாத நள்ளிருட் காலத்துத் தாம் கொண்ட மனநிலைக்கேற்பவும் அணங்கு, பேய், பூதம், வரையரமகளிர், வானரமகளிர், நீரரமகளிர், சூர் முதலியனவாகப் பல்வேறு தெங்வங்கள் உண்டென நம்பி அவற்றுக்கு அஞ்சி வாழ வேண்டிய நிலையினராயினர்.

மக்கள் மனவறிவு நிரம்பப் பெறாத தொல் பழங் காலத்தில், வேண்டுதல் வேண்டாமைல்லாத செம்பொருள் ஒன்றே யென்னுந் தெளிவு பெறாது நெஞ்சம் நடுங்கும்படி தாம் கண்ட வெளித் தோற்றங்களையும் அவற்றைக் குறித்துப் பிறர் சொல்லக் கேட்டவற்றையும் தெய்வமென எண்ணி அவற்றால் வரும் துன்பங்களை விலக்குதற் பொருட்டுச் சிற்றுயிர்களைக் கொன்று அவற்றின் ஊனையும் கள்ளையும் அவற்றுக்குப் படைத்து வணங்கும் சிறுமை நிலையிற் செய்யப்படுதலின் இத்தகைய வழிபாடுகள் சிறு தெய்வ வணக்கம் என வழங்கப்பெறுவனவாயின. இனி, சங்கத்