பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கச்செய்யுட்களில் இடம்பெற்றுள்ள தெய்வ வழிபாடும்...

147


காடை வேட்டைக்குச் செல்வோன் அதனைப் பெறாது வறுங்கையினனாயும் திரும்புவான். அதனால் உயர்ந்த விருப்பத்தை உடைய பெரியோர்க்குத் தம்மாற் செய்யப்படும் நல்வினைப் பகுதியில் அதனை அனுபவித்தல் உண்டாயின் அவருக்கு இருவினையும் செய்யப்படாத தேவர் உலகத்தின் கண் இன்பம் நுகர்தலும் கூடும். அவ்வுலகத்தின்கண் நுகர வேண்டிய வினைப்பயன் தீர்ந்து இல்லாது ஒழியுமானால் அதனினும் மேலாக மீண்டும் பிறவாமையாகிய பேரின்பம் பெறுதலும் கூடும். உயிர்கள் இவ்வுலகில் எடுத்துள்ள இவ்வொரு பிறவியேயன்றி மீளப் பிறத்தல் இல்லை என மறுபிறப்பினை உடன்படாதவர் கூறினும் அன்னோர் அறத்தின்பயன் இதுவென்று நேரிற் கண்டுதெளியுமாறு இமயமலையின் சிகரம் போன்ற தமது புகழை இவ்வுலகில் நிலைபெறுத்திப் பழியில்லா உடம்பொடு கூடிநின்று சாதல் மிகவும் சிறப்புடையதாகும். ஆகவே, எந்தவகையால் ஆராய்ந்து பார்ப்பினும் நல்லறங்களைச் செய்தல் ஒருவர்க்குப் பொலிவினைத் தருதல் உறுதி என்பது இப்புறப்பாடலிற் பொதிந்துள்ள உண்மையாகும்.

இதனால் இவ்வுலகில் உயிர்கள் செய்த நல்வினை அவ்வுயிர்களைத் தொடர்ந்து மறபிறப்பினும் சென்று பயனளிக்கும் எனவும் மறுபிறவி இல்லையென்பார் உளராயினும் அவர்களும் அறத்தின் பயனை இப்பிறவி ஒன்றில் வைத்து அறத்தின் பயனை உணரும்படி அறவினை தன்னைச் செய்தோர்க்குப் பயன் அளிக்கும் எனவும் வேந்தர் பெருமானாகிய கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து தன் உயிர் துறக்குங்காலத்து உலக மக்களுக்கு அறிவுறுத்திய மெய்யுணர்வுத் திறம் சான்றோர்களால் வியந்து பாராட்டத் தகுவதாம்.

மறுபிறப்பு உண்டு என்னும் கொள்கை தமிழ் மக்களது மாறாத நம்பிக்கையாகும் என்பதனை வற்புறுத்தும் சங்கப் பாடல்கள் பலவுள்ளன.

"இம்மைச் செய்தது மறுமைக்காம்” (புறம். 134)

எனவும்,