பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

12


மூன்றாவதாகச் சிவலிங்கத்தையும் சர் ஜான் மார்ஷல் என்பார் முறைப்படுத்திக் கூறியுள்ளார். பண்டைய திராவிட மக்களிற் பெரும்பாலோர் தாய்வழி யுரிமையாகிய தாயமுறையினையே கடைப்பிடித்தனர் எனவும் அது காரணமாகவே திராவிட மக்களிடையே தாய்த்தெய்வ வழிபாடு பெருவழக்காயிருந்ததெனவும் கூறுவர் சமூகவியல் அறிஞர். பெற்றோர் வழியே பிள்ளைகள் பெறும் பொருளுரிமை 'தாயம்’ என்ற சொல்லாற் சங்கச் செய்யுட்களில் வழங்கக் காண்கின்றோம். தாயம் என்ற இச்சொல் 'தாய்’ என்ற சொல்லின் அடியாகப் பிறந்ததென்பது இங்குக் கருதத்தகுவதாகும்.

சங்ககாலத் தமிழர்நாகரிகத்திற்கும் சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் நாகரிகத்திற்கும் இடையே சமய வழிபாடு பற்றிய தொடர்புகள் மிக நெருக்கமாகவுள்ளன. தமிழகத்தில் தொன்று தொட்டு நிலைபெற்றுவரும் சத்திவழிபாடும் இத்தொடர்பினை உறுதிப்படுத்துஞ் சான்றுகளாக அமைந்துள்ளன. சிந்து வெளியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பொருள்களில் வரையப் பெற்றுள்ள எழுத்துக்குறிப்புக்கள் தமிழொடு தொடர்புடையனவாக ஆராய்ச்சியாளர்களாற் கருதப்படுகின்றன.

சிந்தனைக்கரிய சிவபரம்பொருளை மன்னுயிர்களின் சிந்தையிற் சுடர் விட்டு விளங்கும் சோதிப் பொருளாகவைத்து வழிபடும் நிலையில் முன்னைத் தவப்பெருஞ் செல்வர்களாற் பல்லாயிர ஆண்டுகட்குமுன் கண்டு வழிபடப்பெற்ற தொன்மை வாய்ந்தது, சிவலிங்கத் திருவுருவமாகும். சிவலிங்கத்தின் அடிப்பீடமாகிய வட்டக்கல் மன்னுயிர்களின் நெஞ்சத் தாமரையினையும் அதன் நடுவே நாட்டப்பெற்றுத் தூண்வடிவில் நிமிர்ந்து தோன்றும் பானம் நெஞ்சத் தாமரையின் உள்ளிருந்தெழுஞ் சோதியாய்ச் சுடர்விட்டொளிரும் சிவ பரம்பொருளையும் குறிக்கும் அடையாளங்களாகும்.

“காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே”

2. காரைக்காலம்மையார், அற்புதத் திருவந்தாதி, 17.