பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


‘'எதுக்களாலும் எடுத்த மொழியாலுமிக்குச் சோதிக்கவேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி”

'மனத்துள்மாயனை மாசறுசோதியை'

"இரந்திரந்துருக என்மனத்துள்ளே எழுகின்ற சோதியே?”

எனவும் வரும் திருமுறைத் தொடர்கள், உலக முதல்வனாகிய இறைவன் மன்னுயிர்களின் மனத்தகத்தெழுஞ் சோதியாகத் திகழுமாண்பினை நன்கு வலியுறுத்தல் காணலாம். அலகில் சோதியளாகிய முதல்வனை அகத்தே ஒளியுருவிற்கண்டு வழிபடும் அகப்பூசை முறைமையினை,

“மாதினையோர் கூறுகந்தாய்.....................

காதன்மையாற் றொழுமடியார் நெஞ்சினுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே”

எனவரும் திருத்தாண்டகத் திருப்பதிகத்தில் திருநாவுக்கரசர் தெளிவாக அருளிச் செய்துள்ளார்.

உயிர்களின் நெஞ்சக்கமலத்தே கேழில் பரஞ்சோதியாய்க் கிளர்ந்து தோன்றும் சிவபரம்பொருளைத் தம் மனத்தகத்தே கண்டு வழிபட்டு, மகிழ்ந்த தவப்பெருஞ்செல்வர்கள் தாம் கண்ட அத்தெய்வக்காட்சியை உலகமக்கள் எல்லோரும் புறத்தே கண்டு வழிபட்டு உய்திபெறுதல் வேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோளுடன் புறத்தே அமைத்துக் கொண்ட திருவுருவமே சிவலிங்கத் திருமேனியாகும். சிவலிங்கத்தின் அடிப்பீடம் உயிர்களின் நெஞ்சத்தாமரையின் உருவாகவும் அதன் நடுவே சுடருருவில் நிமிர்ந்து தோன்றும் பானம், காண்டற்கரிய கடவுள் தீவண்ணனாகச் சுடர்விட்டொளிரும் நிலையைப் புலப்படுத்தும் அருவமாகவும் திகழ்தலால் சிவலிங்கம் இறைவனுக்குரிய அருவுருவத் திருமேனியாயிற்று.

3.திருஞானசம்பந்தர் தேவாரம், 3. 54, 3.

4.திருநாவுக்கரசர். தேவாரம், 5. 15. 2.

5.மாணிக்கவாசகர், திருவாசகம், 395.

6.திருநாவுக்கரசர், தேவாரம், 6. 61. 1.