பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ வழிபாட்டின் தொன்மையும் உலகளாவிய விரிவும்

27


முனிவர்கள் எல்லாம் வல்ல இறைவனைத் தீயுருவினனாக அமைத்து நெய்யினைச் சொரிந்து நெல்லும் மலரும் தூவி வழிபட்ட முத்திவேள்விகட்கும் இடையேயுள்ள வேறுபாடு பெரிதாகும். முன்னர்க் குறிக்கப்பட்ட பண்டை ஆரியர்களின் வேதவேள்வி கெளதமபுத்தர் மகாவீரர் முதலிய அருளாசிரியர்களால் வெறுத்தொதுக்கப்பட்ட கொலை வேள்வியாகும். பின்னர்க் குறித்த நான்மறை முனிவர் இயற்றிய முத்திவேள்வி தீவண்ணனாகிய சிவபெருமானை முழுமுதற்கடவுளாகக் கொண்டு இயற்றப்பெறும் தூய வேள்வியாகும். இவை இவற்றிடையேயமைந்த அடிப்படையான வேறுபாடுகளாகும். ஆரியக் குழுவினனாகிய தக்கன் செய்த வேள்வி சிவபரம்பொருளையுடன்படாத நிலையிற் சிதைவுற்ற வைதிக வேள்வியாதலும் சங்க காலத்தில் தமிழ்நாட்டிற் கவுணியன்விண்னந்தாயன் செய்த வேள்வி சிவபெருமானைப் போற்றும் சைவவேள்வியாதலும் இங்கு நோக்கத்தக்கன. இந்திய நாட்டில் ஆரியர் குடியேறுவதற்குமுன் நிலைபெற்ற கடவுட் கொள்கை முதலிய திராவிடருடைய வாழ்க்கை முறைகளும் ஆரியருடைய வைதிக ஒழுகலாறுகளும் சங்ககாலத்திலும் அதனையொட்டிய காலத்திலும் தம்முள் ஒன்றோடொன்று உறழ்ந்து கலப்புற்ற திறத்தினைத் தென்னகத்தில் தோன்றிய தொல்காப்பியம் சங்கவிலக்கியம் முதலிய தமிழ்த் தொன்னூல்களும் வடநாட்டில் தோன்றிய உபநிடதம் முதலிய வடமொழி மெய்ந்நூல்களும் நன்கு புலப்படுத்துகின்றன.

வேதத்திற்குப் புறம்பாக வடநாட்டிற் கிளைத்தெழுந்த புத்தம் சமணம் ஆகிய சமயங்கள் தமிழ்நாட்டிற் புகுந்து மெல்லமெல்லப் பெருவழக்குப் பெற்றதனைத் தொடர்ந்து ஆரியரது வைதிக சமயமும் தமிழ்நாட்டில் தொடர்ந்து நிலை பெறுதற்குரிய வழி வகைகளைக் காண்பதாயிற்று. வேதவழிப்பட்ட வேள்விச் சடங்குகளையே வற்புறுத்தி வந்த வைதிக சமயத்தார் தமது கொள்கை நாட்டில் தனித்து நிலைபெறுதற்குரிய வன்மையில்லாதது என்பதனைத் தெளிவாகவுனர்ந்து கொண்டு நெடுங்காலமாக இந்நாட்டு மக்களுள்ளத்திலே நிலைபெற்று வளர்ந்துள்ள சைவம், வைணவம் முதலிய