பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் . . .

455


உலகின் உண்மையும், மூன்றாவதாக இன்பம் கூறவே அவ்வின்பத்தினை நுகர்தற்குரிய உயிர்களது உண்மையும் உடன் கூறினாராயிற்று.

திருக்குறளில் முதற்கண் அமைந்த கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரம் உலகுயிர்களை இயக்கியருளும் கடவுள் ஆகிய முழுமுதற் பொருள் உண்டு என்னும் உண்மையினைக் கருதலளவையால் (அனுமானப் பிரமானத்தால்) வலியுறுத்தி இறைவனது பொதுவியல்புடன் தன்னியல்பும் ஆகிய இருவகையிலக்கணங்களையும் சுருக்கமும் தெளிவும் பொருந்த விரித்து விளக்குந்திறன் முன்னர் எடுத்துக்காட்டப் பெற்றது. முதலதிகாரத்திற்கு அமைந்த கடவுள் வாழ்த்து என்னும் பெயர் "கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே” (தொல். பொருள். புறத்)என்னும் தொடரை அடியொற்றி யமைக்கப் பெற்றதாகும். இறைவனுக்கு வழங்கும் பெயர்கள் பலவற்றுள் கடவுள் என்ற பெயர் திருக்குறளில் இடம் பெறவில்லை. ஆயினும் கடவுளைக்குறித்துப் பலராலும் வழங்கப்பெறும் இறைவன் என்ற பெயர் இவ்வதிகாரத்தில் இருமுறை ஆளப்பெற்றுள்ளமை காணலாம். இறைவன் என்னும் தமிழ்ச்சொல் உலகுயிர்கள் தோறும் நீக்கமறத் தங்கியுள்ளவன் என்ற பொருளிற் கடவுளைக்குறித்து வழங்கும் காரணப் பெயராகும். இறுத்தல் - தங்குதல் உயிர்ப்பொருள் உயிரல் பொருள் ஆகிய எல்லாப் பொருள்களிலும் நீக்கமறத்தங்கியிருத்தல் கடவுளது இயல்பாதலின் இறைவன் என்ற சொல் கடவுளுக்குரிய காரணப்பெயராயிற்று.

உலக முதல்வனாகிய கடவுளுக்கேவுரிய இப்பெயர் அவனருளால் உலகத்தையாளும் உரிமை பெற்ற மன்னர்க்குரிய பெயராகவும் தொன்னூல்களில் ஆளப் பெற்றுள்ளது. முன்னுயிர்களாற் செய்யப்படும் நன்றும் தீதும் ஆகிய இருவினைகட்கேற்ப அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களை வினைசெய்த உயிர்க்ளே நுகரும்படி நடுநிலையில் நின்று முறைசெய்தல் இறைவனுக்குரிய இயல்பாகும் என்பது பால்வரை தெய்வம் என்னும் தொல்காப்பியத் தொடர்க்குப் பொருள் காண்புழி முன்னர்