பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv




மெய்யுணர்வு தலைப்பட்டவர்கள் இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகவே கருதுவர். அத்தகையவர் கடமை உணர்வுகளில் தவறாத வாழ்வினை உடையவராவர்; உரிமை என்ற உணர்வே இல்லாதவராயிருப்பர். அவர்களே என்றும் இன்பம் பெருகும் இயல்பினராய் விளங்குவர். இன்பமே எந்நாளும் துன்பமில்லை எனப் பாடிய அப்பரடிகள் போன்றோர் இந்நிலையில் வாழ்ந்து காட்டிய பெருமக்களாவர்.

இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக எண்ணும் இந்நிலை பெறுதல் எளிதல்ல. தத்துவ உணர்வுகளை நெறியாக வளர்ப்பதனாலேயே அதனை மக்களிடையே உண்டாக்க முடியும். இவ்வகையில், சிவனை வழிபடும் சிவநெறியான சைவமே மிகப் பழமையானது என்பதை மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடங்களில் காணக் கிடைத்த அகழ்வாய்வுப் பொருள்களாலும் அறிகிறோம்.

சிவநெறியிற் கொள்ளப்படும் அடிப்படை உண்மைகளையும் கொள்கைகளையும் முறைப்படுத்தி உணர்த்தும் நூல்கள் சாத்திரங்கள் எனப்பெறும். சாசனஞ் செய்வது சாத்திரம் என்பர். சாசனம் - ஒழுங்கு ஆணை. பொருள்களை ஒழுங்குபடக் கூறுதல் பற்றியும், ஆசான் வடிவில் தோன்றி இறைவன் தன் ஆணையை இந்நூல்கள் வடிவில் வைத்தல் பற்றியும் இவை சாத்திரம் எனப்பெறும். இவ்வியல்புள்ள, ஞான மெய்ந்நெறி உணர்த்தும் தமிழ் நூல்களுள் முதன்மையான முழுநூல் திருமூலரின் திருமந்திரமாகும்.

எட்டாம் நூற்றாண்டு முதலாகவே நம் நாட்டில் சமயக் கொள்கைகளிலே குழப்பங்கள் பல மலிந்திருந்தன. அக்குழப்பங்களை நீக்கி மக்கள் தெளிவுணர்வு பெற்றுய்ய வேண்டுமென்னும் நற்சிந்தை கொண்ட சிவாநுபூதிச் செல்வர்கள் அருளிச்செய்த செந்தமிழ் நூல்கள் பதினான்கு ஆகும். அவை, திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, உண்மை நெறி விளக்கம், கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, சங்கற்ப நிராகரணம் என்பனவாம்.

மக்கள் பொய்யை நீங்கி மெய்யில் நிற்குமாறு, மெய்யைக்கண்டு காட்டுதலால் மெய்கண்ட நூல்கள் எனவும், மறைமுடிவின் சித்தாந்தம் கூறும் சிவாகம ஞானபோதப்பொருள் உணர்த்துதல் பற்றிச் 'சைவ சித்தாந்த சாத்திரங்கள்' எனவும் இந்நூல்கள் வழங்கப் பெறுகின்றன.