பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


ஆன்மாவுக்குத் தன்னையறிதலால் தனக்கு வருவது ஆன்ம லாபமாகிய ஊதியமேயன்றி எத்தகைய இழப்பும் இல்லை என அறிவுறுத்துவார் தன்னையறியத் தனக்கொரு கேடில்லை’ என்றார். தன்னியல்பை யறியாமையால் தலைவனையும் அறியப்பெறாது ஆன்மசுத்திக்குப் பின் உண்டாகும் சிவப்பேறாகிய பெரும்பயனை யிழந்து ஆன்மாவாகிய தனக்கே கேடு சூழ்கின்றான் என்பார், 'தன்னையறியாமல் தானே கெடுகின்றான்’ என்றார். தன்னையறியும் அறிவு” என்றது அறிவே யுருவாகிய இறைவனை. ஆன்மா தன்னை அறியும்பொழுதே தானே முதல்வன் அல்லன் தனக்கு மேலாக முதல்வன் ஒருவன் உளன் என்பதனையும் அறிந்து கொள்வான் ஆதலால் தனக்குச் சார்பாயுள்ள அத்தலைவ னில்லாமல் தானில்லை என்பதனையுணர்ந்து அவனருளிய சிவஞானத்தைப் பெற்று அம்முதல்வனையே வழிபட்டு அவனோடு இரண்டறக் கலந்து என்றும் பொன்றாப் பெரு வாழ்வைப் பெறுவான் என்பார் தன்னையே அர்ச்சிக்கத்தான் இருந்தானே’ என்றார். இதன் நான்காமடியில் தன்னை' என்றது, தன் ஐ தன் தலைவன் என்ற பொருளில் ஆளப்பெற்றதாகும். 'தன்னிற் றன்னையறியுந் தலைமகன் (2349) எனத் திருமந்திரத்திலும், திருக்குறுந்தொகையிலும் தன்னை என்பது தன்தலைவன் என்ற பொருளிற் பயின்றுள்ளமை காணலாம். இங்குத் தன்னையறிதல் என்றது, சிவரூபத்தால் ஆன்மதரிசனமும், சிவதரிசனத்தால் ஆன்மசுத்தியும் பெறுதலை.

குருவின் அருளால் ஆன்மா தன்னை அறிவுடைய சித்துப்பொருள் என்று அறிந்து கொண்டமை கூறுவது.

"அறிவு வடிவென்றறியாத என்னை

அறிவு வடிவென்றருள் செய்தான் நந்தி அறிவு வடிவென் றருளா லறிந்தே அறிவு வடிவென்றறிந்திருந்தேனே' (2357)

எனவரும் திருமந்திரமாகும். "அறிவுருவே ஆன்மா என்று அறியும் ஆற்றலில்லாத என்னை என் குருமுதல்வனாகிய நந்தி அறிவே ஆன்மாவின் உருவம் என்னும் உண்மையை அறிவுறுத்தியருளினான். அவனது திருவருளால் என்னுயிரின்