பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


கொண்டுவந்து வினை செய்தாரைத் தொடர்ந்து பற்றி நுகர்விக்கும் உணர்வும் ஆற்றலும் உடையதன்று எனவும், எல்லாப் பொருள்களையும் ஒழுங்கு பெற இயக்கியருளும் இறைவன் வகுத்த முறைமையே ஊழ் எனப்படும் எனவும் தெளிவுபடுத்தக் கருதிய திருவள்ளுவர் வகுத்தான் வகுத்தவகை' என்ற தொடரால் ஊழ்வினையாவது இதுவென விளக்கியுள்ளார். இத்தொடரில் வகுத்தான் என்னுஞ்சொல் இறைவனைக் குறிப்பதாகும் வகுத்த வகை'யென்றது அம்முதல்வனால் வகுக்கப்பட்ட நியதியாகிய ஊழைக் குறிப்பதாகும். பகுத்தது பால் என வழங்கினாற் போன்று வகுத்தது வகையென்றாயிற்று.

தெய்வத்தின் இயல்பினை விரித்துரைக்கக் கருதிய தொல்காப்பியனார். பால்வரை தெய்வம்' என்ற தொடரால் தெய்வத்தினைக் குறித்தார். அவ்வாசிரியர் குறிப்பின் வண்ணம் ஊழின் இயல்பினை விளக்கக் கருதிய திருவள்ளுவர் வகுத்தான் வகுத்த வகை’ என அதனை விரித்துரைத்தார். எனவே 'பால்வரை தெய்வம் எனத் தொல்காப்பியனார் கூறியதும் வகுத்தான் எனத் திருவள்ளுவர் கூறியதும் இறைவனேயே என்பது நன்கு புலனாம். ஒருயிர் செய்த வினையின் பயன் பிறிதோ ருயிரின்கட் செல்லாமல் வினை செய்தவுயிரையே வினையின் பயன் சென்று சேரும்படி வகுத்து நுகர்வித்தல், வேண்டுதல் வேண்டாமையிலானாகிய இறைவன் செய்யும் முறைமை யாதலின் வகுத்தான்’ என்ற பெயராற் கடவுளைக் குறித்தார். இத்தொடரில் வகை யென்றது கடவுளால் வகுத்து நுகர்விக்கப்படும் வினைப்பயனாகிய ஊழினை. ஊழைப் பற்றிய இக்கொள்கையினை,

“யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத்தானமைத்த

ஊழின் வலியதொன் றென்னை

என வருந்தொடரால் திருவாதவூரடிகள் விளக்கியதிறம் இங்கு ஒப்பு நோக்கியுணரத்தகுவதாகும்.

9. மாணிக்கவாசகர், திருக்கோவையார், 350.