பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/740

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

732

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


நெய்யின் உறுசுவையாம் நீள்வெண்ணை மெய்கண்டான்

செய்ததமிழ் நூலின் திறன்"

எனவரும் பழம்பாடலாகும்.

கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார் தமிழரின் தொன்மைச் சிவநெறியினை உணர்த்தும் முறையில் சிவாகமப் பொருளை விரித்துரைக்கும் சிவஞான போதம்’ என்னும் தமிழ் முதல் நூலை இயற்றினார். “இந்நூல் சிவாகமங்களின் ஞானபாதப் பொருளை ஆராய்ந்து வரையறுத்து பொருள்துணிபு உணர்த்துதலின் சிவஞான போதம்’ என்னும் பெயர்த்தாயிற்று என்பர் சிவஞான முனிவர். சிவஞான போதம் பன்னிரு சூத்திரங்களால் இயன்றது. கருத்தும் மேற்கோளும் ஏதுவும் உதாரணமும் ஒருங்குடையதாய்த் திகழும் இந்நூலின் முதல் மூன்று சூத்திரங்கள் பதி, பாசம், பசு என்னும் முப்பொருள்களின் உண்மைக்குப் பிரமாணங்கூறுவன. நான்கு ஐந்து ஆறாம் சூத்திரங்கள் முறையே பசு, பாசம், பதி ஆகிய முப்பொருள் களின் இலக்கணம் உணர்த்துவன. ஏழு எட்டு ஒன்பதாஞ் சூத்திரங்கள் பாசத்துட்பட்ட உயிர்கள் பாசத்தினை ஒழித்து சிவபரம் பொருளையடைதற்குரிய சாதனம் கூறுவன. பத்து, பதினொன்று, பன்னிரண்டாம் சூத்திரங்கள் பாசநீக்கமும் சிவப்பேறும் ஆகிய பயன் கூறுவன. இவ்வகையால் இந்நூல் பிரமான இயல், இலக்கண இயல், சாதன இயல், பயனியல் என நான்கு இயல்களை உடையதாயிற்று. இவற்றுள் முப் பொருள்களின் பொதுஇலக்கணம் உணர்த்தும் முன்னுள்ள ஆறு சூத்திரங்களும் பொது அதிகாரம் எனவும், அவற்றின் சிறப்பிலக்கணம் உணர்த்தும் பின் ஆறு சூத்திரங்களும் 'உண்மை அதிகாரம்’ எனவும் வழங்கப்பெறும். சைவத் திருமுறைகளில் பன்னிரண்டாந் திருமுறையாகத் திகழும் திருத்தொண்டர் புராணத்தில் போற்றப்பெறும் சிவனடியார் செய்திகளை உளங்கொண்டு திருத்தொண்டர் திருவேடத் தையும், திருக்கோயில்களையும் சிவனெனவே தொழுது போற்றும் சீவன் முத்தர்களின் இயல்பினை அறிவுறுத்தும் நிலையில் சிவஞான போதத்தின் பன்னிரண்டாம் சூத்திரம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தகுவதாகும்.