பக்கம்:சைவ சித்தாந்த சாத்திர வரலாறு.pdf/809

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

800

சைவ சித்தாந்த சாத்திர வரலாறு


புறவிருள் மறைந்துபோக, மக்கள் கண்ணின் ஒளி விளங்கப் பெற்று எதிர்ப்பட்ட எல்லாப் பொருள்களையும் காணப் பெறுதல் போன்று, ஆன்மாவுக்கு இறைவனது அருளொளி தோன்றிய அளவில் இதற்குமுன் அதனைப் பற்றியிருந்த ஆனவஇருள் நீங்கி மறைய, அவ்வருளொளியின் உதவியால் ஆன்மாவானது தன்னையும் தன் உயிர்க்குயிராய முதல்வனை யும் ஏனைய பொருள்களின் நிகழ்ச்சியினையும் உள்ளவாறு காணும் ஆற்றலைப் பெறுகின்றது. பளிங்கினில் விளங்கித் தோன்றிய மலர்களின் வடிவும் நிறமும் கதிரவன் வானின் உச்சியை அடையும்போது மெல்ல மெல்லக் குறைந்து உச்சிக்கு வந்த நிலையில் முற்றிலும் இல்லையாய் ஒழிதல் போன்று செழுஞ்சுடர் ஞாயிற்ாகிய இறைவனது அருள் விளக்கம் உயிரின்கண் பதியுந்தோறும் முன்னர் ஆன்மாவைச் சூழ்ந்திருத்த மாயை கன்மங்களின் சார்பும் அணுவணுவாய்த் தேய்ந்து பின்னர் அவ்வருளொளி ஆன்மாவை முற்றிலும் அகத்திட்டுக் கொண்ட நிலையில் அவற்றின் சார்பு ஆன்மாவை விட்டு முற்றிலும் இல்லையாய் ஒழிந்துபோம். இவ்வாறு மாயை கன்மங்களின் சார்பு முற்றுங்கெடச் சிவனொளியில் ஒன்றி நின்று காணும் தூய நல்லறிவினராகிய சிவஞானிகட்கு மெய்ப் பொருளாகிய சிவபரம் பொருளை யன்றி உயிராகிய தம்மைப்பற்றிய உணர்வும் ஏனைய உலகப் பொருள்களும் தோன்றாதொழியும். இவ்வுண்மையினை, ஐம்புலன் கையிகந்து சிவனருளில் திளைக்கும் செம்புலச் செல்வராகிய திருவாதவூரடிகள் தாம்பெற்ற சிவானுபவத்தில் வைத்து எடுத்துரைத்துப் போற்றுவதாக அமைந்தது,

"இன்றெனக் கருளி இருள்கடிந்துள்ளத்

தெழுகின்ற ஞாயிறே போன்று

நின்றதின் தன்மை நினைப்பற நினைந்தேன்

நீயலாற் பிறிதுமற் றின்மை

சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்த் தொன்றாந்

திருப்பெருந்துறையுறை சிவனே

ஒன்றுநீயல்லை. அன்றியொன்றில்லை

யாருன்னை யறியகிற் பாரே” (கோயிற் றிருப்பதிகம்)

எனவரும் திருவாசகத் திருப்பாடலாகும்.