பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 செளந்தர கோகிலம் தனது உயிரைக் கொடுப்பதற்குமுன் எவ்வித மனப்பான்மையோடு இருப்பானோ அவ்விதமான நிலைமையை அடைந்து, குன்றிக் குறுகித் தலைகுனிந்து ஊமைபோல நின்றார். அங்கே வந்த நீதிபதி முதலியோரை திவான் ஆசனங்களில் உட்காரச்செய்து, அவர்கள் எல்லோரையும் நோக்கி, "இந்த இன்ஸ்பெக்டர் சொன்ன வரலாறு முழுவதையும் நீங்கள் எல்லோரும் நன்றாகக் கேட்டுக் கொண்டிருந்தீர்களல்லவா?’ என்று வினவினார். அவர்கள் எல்லோரும், 'ஆம் கேட்டுக் கொண்டிருந்தோம்: என்று உடனே உத்தரம் கூறினர். திவான் நீதிபதியை நோக்கி, "இவர் சொல்வதை அப்படியே எழுதிக் கொள்ளும்படி, நான் தங்களிடம் கேட்டுக் கொண்டேனே, அந்த மாதிரி எழுதினர்களா?” என்றார். நீதிபதி, "ஆம், இந்த இன்ஸ்பெக்டர் இங்கே வந்ததுமுதல் இதுவரையில் உங்கள் இருவருக்கும் நடந்த சம்பாஷணையை அப்படியே எழுதி இருக்கிறேன். இதோ படிக்கிறேன். கேளுங்கள்” என்று கூறித் தமது கையில் இருந்த ஒரு காகிதத்தை எடுத்து அதில் எழுதப்பட்டிருந்ததைப் படித்தார். திவானுக்கும் இன்ஸ்பெக்டருக்கும் நடந்த சம்பாஷணை முழுதும் தவறின்றி அப்படியே எழுதப்பட்டிருந்தது. உடனே திவான் அங்கிருந்த போலீஸ் சூபரின்டென்டெண்டு முதலியோரை நோக்கி, “எங்களுக்குள் நடந்த சம்பாஷணை முழுவதும் இந்தக் காகிதத்தில் சரியாக எழுதப்பட்டிருக்கிறது அல்லவா?’ என்றார். மற்றவர்கள், 'ஆம்’ என்றனர். திவான் உடனே இன்ஸ்பெக்டரை நோக்கி, "என்ன, ஐயா! சொல்லுகிறீர்? நாம் பேசியதை நீதிபதி சரியாக எழுதி இருக்கிறாரல்லவா?’ என்றார். இன்ஸ்பெக்டர் மெளனம். திவான், "என்ன ஐயா! உம்மைத்தானே! நான் கேட்பதற்கு உத்தரம் சொல்லும்” என்றார். - இன்ஸ்பெக்டர், “எனக்கு ஒன்றும் தெரியாது. இவ்விதமான சங்கதி எதையும் நான் தங்களிடம் சொல்லவில்லை" என்றார்.