பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவான் சாகேப், காந்திமதி யம்மாள், ராஜா பகதுர் f71 அவ்வளவே வித்தியாசம். என்ன செய்கிறது. நாம் பெரியவரு டைய மனசுக்கும் திருப்திகரமாக நடந்துகொள்ள வேண்டும் அல்லவா. அவருக்கும் நம்மையன்றி வேறே உற்றார் உறவினர் யார் இருக்கிறார்கள். ஒருவருமில்லையல்லவா. எல்லாவற்றிற்கும் நீங்கள் முதலில் போங்கள். தேர் அன்றைக்கு முதல் நாள் நான் அவசியம் அங்கே வந்து சேருகின்றேன். அதன் பிறகு 2,3தினங்கள் நாமெல்லோரும் அங்கே இருந்து உடனே புறப்பட்டு வந்து விடுவோம்” என்று அன்பொழுகக் கூறித் தமது அங்க வஸ்திரத் தலைப்பால் அவரது கண்ணிரைத் துடைத்து விட்டார். பெண்மணி, "நான் உங்களைவிட்டுப் பிரிந்துபோகவே இல்லை. என் உடம்பு மாத்திரந்தான் போகப்போகிறது. இந்த ஏக்கத்தில் எனக்கு அவ்விடத்தில் சாப்பாடு கூடச் செல்லாதென்று நினைக்கிறேன். இரவு பகல் நான் இவ்விடத்து நினைவாகவே உயிரை விட்டுக் கொண்டிருப்பேன். இந்தத் திரு உருவத்தை மறுபடி என் கண்கள் கண்டாலன்றி சீக்கிரம் என் உயிர் போய்விடும். இது நிச்சயமான சங்கதி’ என்று முற்றிலும் நைவாகவும் துக்ககரமாகவும் கூறினாள். அதே சமயத்தில், அவர்களது புதல்வனான ராஜாபகதூர் என்ற சிறுவன் அங்கே வந்து சேர்ந்தான். அவன் சுமார் 12-வயதடைந்தவன் என்று நாம் முன்னரே கூறியிருக்கின்றோம். தாய் தந்தை ஆகிய இருவரது அற்புதமான வனப்பும், தேஜஸும், உத்தம குணங்களும் பன்மடங்கு பெருகித் திரண்டு அவனுருவாய் வந்தனவோ என்று எவரும் ஐயுறத்தக்கபடி அந்த மனமோகன வடிவழகன் சகலமான உத்தம லக்ஷணங்களும் வாய்ந்து சுவர்ண பிம்பம்போல விளங்கினான். அவனது முகம் மகா தீவிரமான புத்தியையும், வீரத் தன்மையையும், கபடமற்ற சாத்விக இயல்பையும் தெற்றென. எடுத்துக் காட்டியதன்றி இயற்கையிலேயே அந்த முகம் சந்தோஷத்தையும் புன்முறுவலையும் காட்டியவண்ணம் இருந்தது. அவ்வாறு தோன்றிய தங்களது புதல்வனைக் காணவே பெற்றோர் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் தூர விலகினர். திவான் முதலியார், 'தம்பீ. இங்கே வா' என்று அளவிட இயலாத வாஞ்சைப் பெருக்கோடு அவனைத் தமக்கருகில் அழைத்துத் தமது இரு கைகளாலும் தடவிக்கொடுத்து, “வண்டி தயாராகிவிட்டதா?’ என்றார்.