பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிக்குகைக்குட் புகுந்த பூம்பாவை 2O4. வருகையை ஆவலோடு எதிர்பார்த்து இருப்பதாகவும் தோன்றுகிறது என்ற நினைவுகள் அவளது மனத்தில் மின்னல் தோன்றி மறைவதுபோல ஒர் இமைப் பொழுதில் தோன்றி மறைந்தன. பதினாயிரங்கோடி தேள்களுக்கும், கொடிய சர்ப்பங்களுக்கும் இடையில் நிற்பவள் போல அந்த அருங்குணமணி தத்தளித்த வண்ணம் தான் என்ன செய்வதென்பதை அறியமாட்டாதவளாய், எதிரில் நின்ற மனிதர் யாரென்பதைத் தெரிந்துகொள்ளும் கருத்துடன் நிமிர்ந்து அவரை ஏறிட்டுப் பார்த்தாள். போலீஸ் இன்ஸ்பெக்டர் பராங்குசம் பிள்ளை கண்ணபிரானைக் கைதி செய்து அழைத்துவந்த சமயத்தில், ஏராளமான ஜனங்கள் அவரையும் ஜெவான்களையும் சூழ்ந்து மறைத்துக் கொண்டிருந்தமையால், அப்போது மிகுந்த நாணமும் வெட்கமும் அடைந்து தலைகுனிந்து நின்ற கல்யாணப் பெண்ணான கோகிலாம்பாள் இன்ஸ்பெக்டரது முகத்தையாகிலும், மற்ற ஆண்பிள்ளைகளின் முகங்களை யாகிலும் பார்த்தவளேயன்று. அதுவுமன்றி, இன்ஸ்பெக்டர் தமது சயன அறையிலிருந்து, அவளைத் தூக்க வந்தபொழுது, தமது உத்தியோக உடைகளை அணிந்து கொண்டிராமல் சாதாரண வஸ்திரங்களைத் தரித்துக் கொண்டிருந்தமையால், அவர் இன்னார் என்பதாவது, அவர் போலீஸ் இலாகாவைச் சேர்ந்தவர் என்ற குறிப்பாவது அந்த மடந்தைக்குத் தெரியவே ஏதுவில்லாது போயிற்று. அந்த இடம் போலீஸ் ஸ்டேஷன் அல்லவென்பது மாத்திரம் அவளுக்குச் சந்தேகமற விளங்கவே, தன்னை அழைத்துவந்த மனிதன் அதுவே போலீஸ் ஸ்டேஷன் என்றும், அதற்குள் தனது ஆருயிர் மணாளர் இருக்கிறார் என்றும் சொன்னது எதனால் என்கிற சந்தேகமே எழுந்தெழுந்து அவளது மனத்தில் பெருத்த ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் உண்டாக்கி, அவளது அறிவு முற்றிலும் குழம்பிப் போகும்படிச் செய்தது. ஆயினும், கண்ணபிரானைக் கைதிசெய்து அழைத்துப் போகவந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நூற்றுக்கணக்கில் ரதிதேவிகள் போல நிறைந்திருந்த அத்தனை வடிவழகிகளில் தன்னைக் கண்டு அந்த rணநேரத்திற்குள் தன்மீது துர்மோகங்கொண்டு, அத்தகைய படுமோசச் சூழ்ச்சியைச் செய்யத் துணிந்திருப்பாரென்று நமது மாதுசிரோன்மணி சந்தேகிக்க எள்ளளவும் ஏதுவில்லை.