பக்கம்:சௌந்தர கோகிலம்-2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 செளந்தர கோகிலம் அங்கங்கு பற்பல மூர்த்தங்களாய் விளங்கும் பரம்பொருளைத் தரிசித்து, அவரது திருநாமங்களையே எப்போதும் ஜெபித்து என் பாப முட்டையைக் குறைப்பதற்கு வழி தேடவேண்டும். அதுவுமன்றி நான் இப்போது உடனே திருவிடமருதூருக்குப் போவது யுக்தமாகத் தோன்றவில்லை. நான் இறந்து விட்டேன் என்ற செய்தி எப்படியும் இரண்டொரு தினங்களில் திருவிட மருதூருக்கு எட்டும். அதைக் கேட்டு என் தகப்பனார் என்ன செய்வாரோ? அதை எப்படிச் சகித்திருப்பாரோ, அல்லது அவர் தம்முடைய உயிரையே விட்டு விடுவாரோ, அதுதான் எனக்குப் பெருத்த கவலையாக இருக்கிறது. காந்திமதியம்மாள் உண்மையில் குற்றவாளியாக இருப்பதாக வைத்துக் கொண்டாலும், அவள் ஒப்புக்காகக் கொஞ்சகாலம் வரையில் துக்கப்படுபவள் போலக் காட்டி, பிறகு தன் இச்சைப்படி நடந்து கொள்ள ஆரம்பிப்பாள். நான் இப்போது திருவிடமருதூருக்குப் போனால் அவர்கள் எல்லோரும் அடித்துக்கொண்டு அழுது புலம்புவதையெல்லாம் நான் கண்ணால் பார்க்க நேரும். அந்த உபத்திரவமெல்லாம் தீரட்டும். எல்லோருடைய மனமும் ஒருவிதமாய் அமைதியடையட்டும். மூன்று நான்கு மாதங்கள் கழித்து எவரும் என்னைக் கண்டுகொள்ளாதபடி நான் ஊருக்குப் போய்ப் பார்க்கிறேன். உண்மையில் காந்திமதி குற்றமற்றவளாக இருந்தாலும், என்னைக் கொல்ல எத்தனித்த வேறொரு மனிதன் என்ன செய்ய எண்ணுகிறான் என்பதும் அதற்குள் தெரிந்து போகும். ஆகையால், மூன்று நான்கு மாதகாலம் வரையில் நான் ஸ்தல யாத்திரை செய்து உண்மையில் பரதேசியாகவே இருந்து சுவாமி தரிசனம் தீர்த்தாடனம் முதலியவைகளைச் செய்து கொண்டே மெதுவாய்ப் பிரயாணம் போகிறேன்” என்று தமக்குள் ஒருவிதமாய் தீர்மானித்துக் கொண்டவராய்ப் பக்கத்து ஊரையடைந்தார். அடைந்தவர், அவ்விடத்திலிருந்த சிவன் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து விபூதி முதலிய பிரசாதங்களைப் பெற்று, அந்த ஊரில் ஒரு சோற்றுக்கடை இருப்பதாக விசாரித்துத் தெரிந்துகொண்டு அவ்விடத்திற்குச் சென்று பணங்கொடுத்துத் தமது போஜனத்தை முடித்துக்கொண்டு வசதியான ஒரு சத்திரத்தின் திண்ணையில் அன்று முழுதும் படுத்திருந்தார்.