பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழரை நாட்டான் தர்பார் - இறந்து பிழைத்தவர் 125

என்று சொன்னிர்களே! முன் தடவை நீங்கள் சொன்னதில், அந்தப்பெண் கிழவருடன் எப்போதும் கூடவே இருந்து அவருடைய பிரியத்திற்குப் பாத்திரமாய் அவருக்கு நிரம்பவும் இழ்ப்படிந்து நடந்ததாகச் சொன்னீர்களே! முதலில் அப்படி நடந்துகொண்ட பெண்ணை பிற்பாடு அவர் தொடக்கூட முடியாமல் போன வகையென்ன?” என்றார்.

அந்த ஸ்திரீ சிறிது தயங்கி, “அவரவருக்கு அதிகாரமும் உரிமையும் ஏற்பட்டு நிலைக்கிற வரையில் அநேகமாய் ஜனங்கள் அப்படித்தான் பணிவாகவும் ஹிதமாகவும் நடந்து கொள்ளு கிறார்கள்; பிறகு புது மாதரியாய் மாறிவிடுகிறார்கள். பெரியவருக்கு அப்போது அறுபது வயசுக்கும் அதிகம் ஆயிருக்கும். யெளவனக் குமரியைப் பார்த்து அவர் கட்டிக் கொண்டால், அது எப்படிப் பொருந்தும் கலியாணமாகி ஆறு மாசத்திற் கெல்லாம், எல்லோரும் சேர்ந்து கிழவரை மூலையில் உட்கார்த்திவிட்டார்கள். பெண்ணுக்கும் யார் யாரோ சிநேகமானார்கள். கடைசியில் அது எப்படியெப்படியோ முடிந்தது. அதை நாம் வாயில் வைத்துப் பேசுவதும் சரியல்ல; முன்பு அவருடைய மருமகள் வழிகாட்டியது வீணாய்ப் போகுமா? இவளும் அதே வழியைப் பின்பற்றினாள் என்றாள்.

அந்த மகா விபரீதமான வரலாற்றைக் கேட்டுக்கொண்டே போன திவானுக்கு, அவரது மனத்தில் அபாரமாகப்பொங்கி எழுந்த விசனத்தினாலும் வேதனையினாலும் அதற்குமேல் அந்த ஸ்திரீயுடன் பேச இயலாமல் போய்விட்டது. அந்தக் கன்ன கொடுரமான வரலாற்றை அதற்குமேல் கேட்கவும் அவரது மனம் இடந்தரவில்லை. அவருக்கு ஒருவித மயக்கமும் கிறுகிறுப்பும் தோன்ற ஆரம்பித்தன. அவர் அந்த ஸ்திரியை நோக்கி, ‘அம்மணி இந்த வரலாற்றைக் கேட்க, என் மனம் நிரம்பவும் சங்கடப்படுகிறது. இதை ஏன் கேட்டோம் என்றாய்விட்டது. உலகத்தில் எங்கே போனாலும் அக்கிரமங்களும், துக்கமும், துயரமுமாகவே இருக்கின்றன. எல்லாம் பரம்பொருளின் செயல்; நம்மால் ஆவதொன்றில்லை; இருக்கட்டும். நான் வெகு தூரத்திலிருந்து வந்ததினால் கொஞ்சம் அயர்வும் மயக்கமும் உண்டாகின்றன. நான் இப்படியே படுத்துக்கொள்ளுகிறேன்'