பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காணிக்குற்றம் கோடிக் கேடு - பிரயாச்சித்தம் 237

தாமே ஆட்சேபணை சமாதானங்கள் செய்து கொண்டிருந்த சமயத்தில் அவரே வந்துவிட்டாரென்ற செய்தி கிடைக்கவே, அவர் கோகிலாம்பாளைப்பற்றி ஏதேனும் நல்ல செய்தி கொண்டு வந்திருப்பாரோ வென்று சிலர் நினைத்து அவரது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தனர்; தனிமையில் இருக்கும் பெண் பிள்ளைகளை இராயபுரத்திற்கு வரும்படி அவர் அழைத்ததைப் பற்றி அவரை நேருக்கு நேர் கண்டிக்க வேண்டுமென்று சிலர் ஆத்திரமடைந்து அவரது வருகையை எதிர்பார்த்தனர். அங்ஙனம் அவர்களது மனநிலைமை பலவாறாக இருக்க, பொன்னுரங்க முதலியார் வந்திருக்கிறார் என்ற செய்தியைக் கேட்கவே பூஞ்சோலையம்மாளின் தேகம் கிடுகிடுவென்று ஆடியது. பிரம்மாண்டமான பேரிடி வந்து தாக்குவதுபோல, அந்த விபரீதச் செய்தி அந்த அம்மாளின் மனத்தில் பெருத்த அனர்த்தத்தை விளைவித்தது. “ஐயோ! நான் பெரிய மனிதர்களான இத்தனை உறவினர்களுக்கு முன்பு அபாண்டமான பொய்யைச் சொல்லி விட்டேனே! அவர் இப்போது வந்து எல்லாவற்றையும் பொய்யாக்கி விடுவாரே! என்னையும் கோகிலாம்பாளையும் பற்றி இவர்களெல்லோரும் பலவாறாகச் சந்தேகித்து முற்றிலும் கேவலமாக மதிப்பதோடு வெளியிலும் போய்த் துற்றுவார்களே! இதனால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் என்றும் அழியாத மானக்கேடும், பழிப்பும், தாழ்ச்சியும் உண்டாகி விடுமே ஈசுவரா! இந்த மகா பயங்கரமான அபாயத்திலிருந்து நான் எப்படித் தப்பி மீளப் போகிறேன். இவர்களுடைய முகத்தில் இனி நான் எப்படி விழிக்கப் போகிறேன்! ஐயோ தெய்வமே! நான் ஒரு சிறிய தவறு செய்தது விபரீதமான அநர்த்த பரம்பரையாய்ப் பெருகி விட்டதே! கண்ணபிரான் எப்படிப்பட்ட பிராணாபாய நிலைமையில் இருந்தாலும், அவனுடைய கடிதத்தைப் பார்த்தவுடன், நான் கோகிலாம்பாளை அனுப்பியது பெருத்த தவறு என்பது இப்போது தெரிகிறதே யொழிய, அப்போது என் மூட புத்திக்குப் படாமல் போய்விட்டதே. அந்தத் தவறுக்காக நானும், என் மூத்த பெண்ணும் என்னென்ன பிராயச் சித்தங்களை அநுபவிக்க வேண்டுமோ தெரியவில்லையே?’ என்று நினைவுகள் அம்மாளின் மனத்தில் பெருத்த திகிலையும் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் உண்டாக்கிவிட்டன. அந்த அம்மாள் நிலை