பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

செளந்தர கோகிலம்

____________________________________________________

மற்றவள், “அடியென்னடியம்மா இவள் படுத்துகிற பாடு நீ ஒரு வாய்ச் சோறு போட்டு இரண்டு நாளிருக்குமே! பசியினால் கண் இருண்டு வருகிறதே என்று ஒரு வார்த்தை சொன்னால் உனக்கு இப்படி மூக்கின்மேல் கோபம் வருகிறதே! என் கண் கொஞ்சமாவது தெரிந்தால், நான் ஏனம்மா உனக்குத் தொந்தரவு கொடுக்கிறேன்; யாருமற்ற அநாதைக்கு ராங்கி என்னடி வந்திருக்கிறது” என்றாள்.

முதலில் பேசியவள் முன்னிலும் அதிகரித்த கோபங் கொண்டு, “உனக்குக் கண் அவிந்துபோனால், அதற்கு நாங்கள் தானடி புணை! நீ நன்றாயிருந்தபோது கொள்ளையடித்ததை யெல்லாம் எங்களிடம் கொடுத்து வைத்திருக்கிறாயா! நாங்கள் ஆண் பாடுபட்டு பெண் பாடுபட்டுத் தேடினாலும், அது எங்களுடைய வயிற்றுக்கே எட்டமாட்டேனென்கிறதே! கிழக்கோட்டான் மாதிரி உன்னைக் குந்த வைத்து உனக்கு யாரடி வேளைக்கு ஒருபடி சோறு கொட்டுவார்கள். கண் இல்லாமல் போனால் என்னடி! நகர்ந்துகொண்டே நாலு வீட்டுக்குப்போய் இரந்து தின்றால், உன்னுடைய கெளரவம் குறைந்து போகுமாடி! பொழுது விடிந்தவுடனே உன் முகத்தில் விழித்தால், அன்று முழுவதும் ரத்தக் காயமே படுகிறது. எழுந்து முதலில் வெளியில் போடி!” என்று முன்னிலும் அதிக பலமாய்க் கூச்சலிட்டாள்.

குருடி, ‘அடியென்னடியம்மா நீ துள்ளிக் குதிக்கிறது! என்னுடைய உடன் பிறந்தான் வீட்டில் நான் குந்துவதற்குக் கூட எனக்குப் பாத்தியம் இல்லையா அம்மா! எல்லா அதிகாரமும் உனக்கே வந்துவிட்டதா! மலைபோல என் உடன் பிறந்தானும், அவனுடைய வீட்டுக்காரியான நீயும் இருக்கிறீர்களே! நான் பிச்சைக்குப் புறப்பட்டால், அதனால் உங்களுக்குத்தானே பங்கம் ஏற்படும் அம்மா! உனக்குப் புண்ணியம் உண்டு. உன் காலில் விழுந்து நான் லக்ஷம் தரம் கும்பிடுகிறேன். நீ எனக்குச் சோறு போடாவிட்டாலும், பரவாயில்லை, என்னைப் பிச்சையெடுக்க மாத்திரம் அனுப்ப வேண்டாம். நான் குந்தி இருப்பதற்கு மாத்திரம் கொஞ்சம் உத்தரவு கொடம்மா! நான் பட்டினி கிடந்து இப்படியே மாண்டுபோகிறேன்” என்று நயமாகக் கெஞ்சி வேண்டினாள்.