பக்கம்:சௌந்தர கோகிலம்-4.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 செளந்தர கோகிலம்

எல்லாம் காந்திமதியம்மாளுக்கு முன்னும் திவானுக்கு முன்னும் வைத்துவிட்டு எல்லோரும் கீழே விழுந்து சாஷ்டாங்கமாக நமஸ் கரித்து எழுந்தனர். உடனே வீரம்மாள் மிகுந்த மனவெழுச்சியும், ஆநந்தமும் பொங்கிய மனத்தினளாய்க் காந்திமதியம்மாளை நோக்கி, ‘அம்மா தாயே! தங்களைவிட்டுப் பிரிந்தபின் இது வரையில் தங்களைப் பற்றிய ஏக்கமே ஏக்கமாக இருந்தது. நேற்றுதான் தந்தி வந்தது. உடனே புறப்பட்டு வந்து சேர்ந்தோம். தாங்கள் உயிரோடிருப்பதாய் ஒரு கடிதம் கூட எழுத வில்லையே என்று நாங்கள் தவித்தது. செந்திலாண்டவனுக்கே தெரியும். தாயே! இன்றுதான் எல்லோருடைய கலியும் நீங்கியது. எங்கள் உள்ளமும் குளிர்ந்தது’ என்றாள்.

அவளைப் பிடித்து ஆசையோடு கட்டித் தழுவிய காந்திமதியம்மாள், ‘அம்மா! உன்னைவிட்டுப் பிரிந்து போன பின், நானும், குழந்தையும் சரியாக ஒரு வருஷ காலம் அலைந்து அலைந்து பார்த்து, இனி அவர்களைக் காணமுடியாதென்று நினைத்து, மூன்று தடவை தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தோம்; மூன்றிடங்களிலும் அகப்பட்டுக் கொண்டோம். நாங்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தது பலிக்கவே இல்லை. கடைசியாக ஒருவர் எங்களிருவருடைய பிறந்த நாளைக் கேட்டு ஜோசியம் பார்த்துச் சொன்னார். அதாவது, ராஜாபகதூரின் அப்பா உயிரோடுதான் இருக்கிறார்கள் என்றும், எங்களெல்லோருக்கும் தீர்க்காயிசாகையால், நாங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் சாகமாட்டோமென்றும் அவர் சொன்னார். அதுவுமன்றி, எங்கள் எல்லோருக்கும் ஏழரை நாட்டுச் சநியன் பிடித்திருப்பதால், அது தீருகிற வரையில் அவர்களை நாங்கள் காணவே முடியாதென்றும், அதன்பிறகு அவர்களே வந்து சேர்ந்து விடுவார்களென்றும், அதுவரையில் எங்கேயாவது பையனைப் படிக்க வைத்து, சிக்கனமாய் ஜீவனம் செய்து கொண்டிருக்கும்படியும் அவர் புத்திமதி சொன்னார். நாங்கள் அப்படியே செய்து, மிகுதி இருந்த பணத்தை வைத்துக்கொண்டு காலந்தள்ளிக் கொண்டிருந்தோம். நாங்கள் இன்னார் என்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று எங்கள் பெயர்களை மாற்றி வைத்துக் கொண்டிருந்தோம். என் எஜமானர் இல்லாத வரையில் நான் உண்மையில் விதவை.