பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IV. சிவாஜி வரலாறு கூறும் மராட்டிய நூல்கள்


1. சபாஸத் (Sabhasad Bakhar).[1]

சிவாஜியின் வரலாறு கூறும் மராட்டிய நூல்கள் ஏறத்தாழ ஒன்பது கிடைத்துள்ளன. அவற்றுள் காலத்தால் முற்பட்டது அல்லது முதலாவதாகக் கருதப்படுவது கிருஷ்ணாஜி அனந்த் சபாசத் (Krishnaji Anand Sabhasad) என்பவர் எழுதிய “சிவச் சத்திரபதி சென் சரித்ரா” என்பதாகும்.

இது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் ஜகந்நாத் லக்ஷ்மன் மங்கர் (Jagannath Lakshman Mankar) என்பார் தனக்குக் கிடைத்த ஒரே சுவடியைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இது கே. என். சனே (Sane) என்பர் வெளியிட்ட மராட்டிய நூலின் மொழிப் பெயர்ப்பாகும். இவ் ஆங்கில மொழி பெயர்ப்பைச் செப்பம் செய்ய வுதவியவர்கள் பேராசிரியர் ஜாதுநாத் சர்க்கார் (Jadunath Sarkar) அவர்களும், குப்தே (B.A. Gupte) அவர்களும் ஆவர் என்று அதன் முன்னுரையால் அறியப்பெறும்.

கிருஷ்ணாஜி அனந்த் சபாஸத் என்பவர் சிவாஜியின் இரண்டாவது மகனாகிய ராஜாராமின் அலுவலர்களுட் சிறந்தவராவர்; ராஜாராமின் ஆணையின்படி இந்நூலைச் செஞ்சியில் 1697இல் இயற்றினார். சிவாஜி இறந்த பிறகு பதினாறாண்டுகள் கழித்து எழுதப்பட்ட போதிலும் இந்நூலைச் சிவாஜியின் சமகாலத்ததாகவே கருதலாம். தான் நேரில் கண்டவற்றையும் கேட்டறிந்தவற்றையும், தொகுத்து இவ்வாசிரியர் எழுதினாரென்றும், புராண நிலையிலுள்ள செய்திகளை இவர் கூறவில்லையென்றும் அரசாங்கச் சுவடிகள் இவருக்குக் கிடைக்கவில்லை என்றும் தெரியவரும்.

இந்நூல் சுருங்கிய அளவினது. செய்திகள் இந்நூலில் கால முறைப்படி சொல்லப் பெறவில்லை. சில தவறானவை. எனினும் சிவாஜி பற்றி இது போன்று எழுதப் பெற்ற மராத்தி மொழி நூல்களில் இந்நூலே நம்பத்தக்கதாகவுளது


  1. “Bakhar is the metathetical form of the Arabic word Khabar which means news or report. In Marathi this term is used in a limited sense, namely political history of the times. The Bakhars were written to order by court writers for their masters... There are about twelve Bakbars dealing with the life and achievements of Shivaji. A few Bakhars are contemporary while a great many are of later period”- The Maratha Supremacy, P. 666.