பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

அவற்றின் வழிவந்த ஒல்காப் புலமைத் தொல்காப்பியனாரின் பொருளதிகாரப் பகுதிகளிலும் நாம் விளக்கமாக அறியலாம். திருமண முறைகள் இலை மறைகாய் போல் இவற்றுள் அமைந்திருக்குமாற்றைத் தொல்காப்பியர் காலமுதல், இடைக் காலம் (12-ஆம் நூற்றாண்டு) முடிய ஒருவாறு காண்போம்.

கணவனும் மனைவியுமாய் வாழத் தொடங்கும் நிலைக்குத் திருமணம் என்ற பெயர் வைத்தமை எண்ணி மகிழ்தற்குரியதாகும். திருவென்னுஞ் சொல் அழகு, செல்வம், செம்மை, சிறப்பு முதலிய பொருள்பொதிந்த சொல்லாகும், சுருங்கக் கூறின், “கண்டோரால் விரும்பப் பெறும் தன்மை விளங்குமிடமெல்லாம்” திருவும் பொலிகின்ற தென்று சொல்லலாம். மணமென்னுஞ் சொல் நறு நாற்றத்தைக் குறிக்கும். பெரும்பாலும் இயற்கையில் மணங்கமழ்வது மலர்களேயாகும். அம்மலரும், வைநுணையாய் - சிற்றரும்பாய், வீயாய் இருக்குங்கால் மணஞ்சிறப்பதில்லை; மலரும் நிலையில் - பெரும் போதாய் நிற்கும் போதுதான் மண மிகுந்து விளங்குகின்றது. காய்த்துக் கனிந்து விளங்க மணமிகும் போதுப் பருவமே சிறந்த தாகும். அங்ங்னமே மக்கள் வாழ்விலும் குழவியாய், இளைஞனாய், நரைமூதாளனாய் இருக்கும் நிலை பெருஞ்சிறப்புடையதன்று. மணந்து மகப்பெற்று நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லன புரியச் சிறந்து நிற்பது மணப் பருவமே யாகும். இப்பருவத்தில், மலரின்கண் மணம் வெளிப்படுவதுபோல் மணமக்களின் மனத்தகத்து அன்பு மலரும். இச்சிறப்புணர்ந்தே தமிழ் மக்கள், இந்நிகழ்ச்சி (மணவினை)யை மணமென மனமுவப்பக் கூறினர். மண மென்பது மணமக்களின் மனமொத்ததாகும். வாழ்வு முழுவதும் மணம் பெற்றுத்