பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

ஒருகாலத்தில் ஆடிய பேடியாடலை யாடிய ஒருவன், வட்டுடை தரித்திருந்ததாக மணிமேகலை மலர்வனம்புக்க காதையில் கூறப்பட்டுள்ளது.

மற்றும், தழையுடையென்னும் விசேட உடையும் பழங்காலத்தில் உண்டு. அவ்வுடை, இளந்தளிர்களினாலும், மலர்களினாலும் ஆயது. அதைப் பெண்கள் அழகுக்காக ஆடையின்மீது அணிந்து கொள்வர். தழையுடையானது, தலைமகனால், தலைமகளுக்குத் தோழியின்மூலம் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டது என்பதற்கு, அகத்துறை நூல்கள் சான்று பகரும்.

பண்டைக் காலத்தில், பட்டாடைகளும் நெய்யப்பட்டன என்பது முன்னரே கூறப்பட்டது. சரிகை கலந்து நெய்யப்பட்ட மஞ்சள் நிறப் பட்டாடை, 'பீதாம்பரம்' என்றும், 'பொன்னாடை' என்றும் பெயர் பெற்றது. இக்காலத்திலும், சிறந்த அறிஞர்கட்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டும் வழக்கம் இருந்து வருகிறது. எலிமயிர், ஆட்டுரோமம் முதலியவற்றைக் கொண்டு நேர்த்தியான கம்பளங்கள் நெய்யப்பட்டன. இவ்வாறு சுமார் முப்பத்தாறு வகை ஆடைகள் அக்காலத்தில் இருந்ததாய்க் கூறப்பட்டுள்ளது. இன்னும், உடை தைக்கும் தையற்காரர் 'துன்னகாரர்' என்னுந் பெயருடன் இருந்திருக்கின்றனர். நூற்றுவர் பின்தொடரவந்த பாண்டி நாட்டுப் பொற்கொல்லன், சட்டை யணிந்திருந்ததாய்த் தெரிகிறது. இது, 'மெய்புகுபை' என்பதினின்றும் விளங்குகிறது. இனி, தமிழரின் அணிகளைப் பற்றி ஒரு சில கூறுவோம்.

பழங்காலத்தில் ஆடகம், சாம்புநதம், கிளிச்சிறை, சாதரூபம் என்னும் நால்வகைப் பொன்னும் நவமணிகளும் மிகுதியாக