பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51


5. தமிழர் நாகரிகம்


வித்துவான் து. கண்ணம்மாள்

பாத்திமா கல்லூரி, மதுரை

நாகரிகம்: சொற்பொருள்

நாகரிகம் என்னும் சொல்லுக்குக் கண்ணோட்டம் என்பது பொருள் என்று திருக்குறள் கூறுகின்றது; நகரத் தொடர்பான ஒழுக்கம் என்று பெருங்கதை பேசுகின்றது"; மரியாதை என்னும் பொருளை உடையது என்று சிவ ரகசியம் செப்புகின்றது'; பலகலை வல்லோரை 'நாகரிகர்' என்று சீவக சிந்தாமணி குறிக்கின்றது"; இலக்கியம், கலை முதலியவற்றை இரசிப்பவர் நாகரிகர் என்று நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் நவில்கின்றது"; நகர மக்கள் என்று திவாகரமும், சமர்த்தர் என்று பிங்கலமும் பேசுகின்றன.

இவையனைத்தையும் ஒருசேரப் பார்க்கும்போது, கல்வி, கலை உணர்வு, கண்ணோட்டம், மரியாதை முதலியவற்றின் திரட்சியே 'நாகரிகம்' என்பது, என்று கூறலாம். இவ்விலக் கணத்தை உளம் கொண்டு, பழந்தமிழர் நாகரிகத்தை ஓரளவு இங்குக் காண்போம்: