பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52


கல்வி

பழங்காலத் (சங்ககாலத்) தமிழர் இக்காலச் சாதி வேறுபாடுகள் இன்றி வாழ்ந்தவர். மன்னரும் 'அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்' என்ற முறைப்படி கல்வி கேள்விகளில் அறிவுடைய மக்களையே மதித்தனர். இன்னவர் படிக்க வேண்டும், இன்னவர் படித்தலாகாது என்ற வரையறை இல்லாததால், அக்காலத்தில் சமுதாய மக்கள் அனைவரும் கல்வி கற்றிருந்தனர். வளமனை காத்த காவற்பெண்டு, குறமகள், குயத்தி, பாணச்சி முதலிய சாதாரணப் பெண்மணிகளும் நல்லிசைப் புலமை மெல்லியலாராக விளக்கமுற்றிருந்தனர். அதியமானிடமிருந்து தொண்டைமானிடம் ஒளவையார் தூது சென்றார் என்பதை நோக்க, அக்காலப் பெண் கல்வியின் திறத்தை என்னென்பது பெருங்காக்கை பாடினியார், சிறு காக்கை பாடினியார் என்ற பெண்பாற் புலவர் யாப்பிலக்கண நூல் செய்தனர் என்பது அக்காலப் பெண்ணுலகச் சிறப்பை நன்கு உணர்த்துகின்றதன்றோ அரசரிருவரும் போரிட்ட போர்க்களத்திலும் ஒளவையார் இருந்து தம் அரசனை ஊக்கப்படுத்தினார் என்பதை நோக்க, படித்த பெண்கள் அரசனால் மதிக்கப்பட்ட திறத்தை நன்கறியலாம்.

இங்ங்னமே பலதுறை ஆடவரும் கல்வி கற்றுச் சிறந்திருந்தனர் என்பதைச் சங்ககால நூல்களால் அறிகிறோம். முடி மன்னராகிய சேர, சோழ, பாண்டியர்களும், அவர்தம் மனைவியர்களும், மக்களும் தாய்மொழியிற் சிறந்திருந்தனர். முடி மன்னரும் சிற்றரசரும், பெருநிலக்கிழாரும் இயற்றமிழில் வல்ல புலவரையும், இசைத் தமிழில் வல்ல பாணரையும், நாடகத் தமிழில் வல்ல கூத்தரையும் நன்முறையில் ஆதரித்து முத்தமிழைப் பேணி