பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறிவும் திருவும்

147


மன்னனுக்குரிய மாளிகையின் அழகையும் அமைப்பையும் கண் குளிரக் கண்டு களித்தார். மாடத்தைச் சூழ்ந்திருந்த சோலையின் வழியே தவழ்ந்து வந்த மெல்விய தென்றல் நறுமணம் கமழ்ந்தது. நெடும் பசியால் நலிந்து, வெயிலால் உலர்ந்து, வழிநடையால் வருந்தித் தளர்வுற்ற தமிழ்ப்புலவர், அரண்மனையில் இருந்து இளைப்பாற எண்ணினார். அதற்கு ஏற்ற இடத்தை நாடுகையில், மாளிகையின் ஒருபால் அழகிய மஞ்சம் ஒன்று தோன்றிற்று. அம்மஞ்சத்தில் மெல்லிய பஞ்சு அமைந்த மெத்தையிட்டு, அதன்மீது பாலாவி போன்ற பூம்பட்டு விரித்திருந்தது. மஞ்சத்தைக் கண்ட புலவர் நெஞ்சம் பள்ளத்துட் பாயும் வெள்ளம் போல் அதன்மீது படர்ந்தது; வண்ணப் பூஞ்சேக்கையைக் கையினால் தொட்டு இன்புறக் கருதி, அதன் அருகே சென்றார். மருங்கு செல்லச் செல்ல அம்மஞ்சம் அவர் மனத்தை முற்றும் கவர்ந்து தன் வசமாக்கிக்கொண்டது. கையினால் அதன் மென்மையை அறிய விரும்பி அணுகிய புலவர் மெய்ம்மறந்து அதன்மீது சாய்ந்தார்; அந் நிலையில் என்றும் அறியாத பேரின்பமுற்றார்: அவ்வின்ப சுகத்தில் மற்றெல்லாம் மறந்து சற்றே கண் முகிழ்த்தார். இயற்கை நலமறிந்த புலவரை இளைப்பாற்றக் கருதிய தமிழ்த் தென்றல் இன்புறத் தவழ்ந்து போந்து அவர் கண்களை இறுக்கியது. அருந்தமிழ்ப்புலவர் இனிய உறக்கத்தில் ஆழ்ந்தார்.

கந்தை உடுத்த செந்தமிழ்ப் புலவர் இவ்வாறு கவலையற்று உறங்குகையில் சேரமான், தானைத் தலைவர் புடைசூழத் தன் மாளிகையை வந்தடைந்தான்; விழா வணி கண்டு மகிழ்ந்த அமைச்சர்க்கும்