பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25. வண்மையும் வறுமையும்

பழந் தமிழ்நாட்டு வள்ளல்களாய் விளங்கிய பாரியும் ஒரியும், ஆயும் அதிகனும், மலையனும் பேகனும் மாண்ட பின்னர், முதிராத வளமுடைய முதிர மலைத் தலைவனாகிய குமணன் அருஞ்சுரத்தினிடையே அமைந்த செழுஞ்சுனை போல் இலங்கினான். பழுமரம் தேரும் பறவை போன்று வறுமையால் வருந்திய மக்கள் இவ் வள்ளலை வந்தடைந்தார்கள்: தமது குறையைக் கரவாது எடுத்துரைத்தார்கள். பசி நோயால் அன்னையும் மனைவியும் மக்களும் வாடி வருந்தக் கண்ட புலவர் ஒருவர் குமணனிடம் போந்து தம் குறையை முறையிட்டார்:

‘ஐயனே! ஆண்டு பல கண்ட என்னுடைய அன்னை, போகாத தன் உயிரோடு புலந்து தண்டூன்றித் தள்ளாடி முற்றமளவும் செல்லமாட்டாத முதுமையால் வருந்துகின்றாள். வறுமையால் வாடித் தளர்த்து. ஒருவரையும் பழியாது ஊழைப் பழிக்கும் உத்தமியாகிய என் மனையாள், குப்பைக் கீரையின் கண்ணிலே முளைத்த முதிராத இளந்தளிரைப் பறித்து. அதனை உப்பின்றி அவித்து உண்டு, உலர்ந்த மேனியோடு உயிர் வாழ்கின்றாள். பால் மணம்