பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மொழியும் நெறியும்

197


சோழ நாட்டிலுள்ள திருநாகேச்சுரத்தில் சிறந்த திருமால் கோவில் ஒன்றுண்டு. திருவிண்ணகர் என்பது அதன் பழம் பெயர். ஆழ்வார்களுள் நால்வர். அத் திருப்பதியைப் பாடியருளினர். "திருவிண்ணகர் சேர்ந்த அப்பன், தன் ஒப்பார் இல்லப்பன்' என்று நம்மாழ்வார் பாடிப் போற்றினார். அவர் திருவாக்கின் அடியாக ஒப்பிலியப்பன் என்ற திருநாமம் அப்பெருமாளுக்கு அமைந்தது. காலப் போக்கில் ஒப்பிலியப்பன் என்பது 'உப்பிலியப்பன்' என மருவிற்று. உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் அவ்விண்னகருக்கு அமைந்தது. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்ற கருத்துப் பரவலாயிற்று. அதன் விளைவாக இன்றும் உப்பில்லாத திருவமுதை அப் பெருமாளுக்கு அளிக்கின்றார்கள். ஒப்புவமை யில்லாத் தலைவன், அடியார் தரும் உப்பில்லாத உணவையும் உட்கொண்டு, தியாகத்தின் திருவுருவாக அத் திருப்பதியிலே காட்சி தருகின்றார்.

வருண ஜெபம் செய்தால் பருவ மழை பெய்யும் என்பது வைதிகக் கொள்கை. ஆயினும், மழை பெய்விப்பதற்குக் குறுக்கு வழி யொன்று சில ஊர்களிலே கையாளப்படுகின்றது. ஆற்றங்கரையில் அரசமரத்தடியில் அமர்த்துள்ள பிள்ளையாருடைய மூச்சைப் பிடித்துவிட்டால் மழை கொட்டும் என்பது கொச்சையன்பர்களின் நம்பிக்கை. அதற்காகப் பிள்ளையாரைச் சுற்றிக் களிமண்ணால் ஒரு கோட்டை கட்டுவர் : தண்ணிரைக் கொண்டுபோய் அதில் கொட்டுவர்; பிள்ளையார் கண் அளவிற்குத் தண்ணிர்