பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தமிழ் இன்பம்


ஆதலால், தான் படித்த கதைப் பாடத்திலுள்ள அரிச்சந்திரனையே அவன் எடுத்துக் கூறுவான். அப்படியே, "வரையாது பொருள் கொடுத்த வள்ளல் யார்?" என்று கேட்டால், 'பாரி' என்று சொல்ல, நம் பள்ளி மாணவர் படித்தாரில்லையே! கொடைக்குக் கர்ணன் என்பதுதானே அவர் படித்த பாடம்! இந்தப் பாண்டி நாட்டிலேயுள்ள மலைக் கோமானாகப் பாரி என்ற தமிழ் வள்ளல் விளங்கினான் என்பதும், "கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை" என்று தேவாரமே அவன் பெருமையைப் பாடிற்று என்பதும் அறியாமல் நம் பிள்ளைகள் படிக்கும் நூல்களிலும் கேட்கும் கதைகளிலும், பழையனுார் வேளாளரும், பாரி வள்ளலும், இவர்போன்ற பெருமக்களும் இடம் பெறல் வேண்டும் என்பது என் ஆசை.

இந் நாட்டிலே உழைப்பாலும், ஒழுக்கத்தாலும் ஒற்றுமையாலும் நம் முன்னோர் சிறப்புற்று வாழ்ந்தார்கள். அப்பண்புகளைப் பாதுகாத்து வளர்த்தல் வேண்டும். வருங்கால வாழ்க்கைக்கு இம்மாநாடு வழிகாட்டுதல் வேண்டும். பல துறைகளிலும் நம் வேளாளர் முன்னேற்றமடைவதற்குரிய முறைகளை வகுத்தல் வேண்டும். இவ்வரும்பெருஞ்செயல்களெல்லாம் நடைபெறப்போகின்ற வேளாளப் பெருமக்கள் மகாநாட்டை வாழ்த்துகின்றேன். மகாநாட்டின் தோற்றுவாயாக இது காறும் நான் பேசிய மொழிகளைக் கேட்டருளிய பெருமக்கள் அனைவரையும் மனமாரப் போற்றுகின்றேன்.