பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 த. கோவேந்தன்

ழகரம் பிற திராவிட மொழிகளில் ரகரமாகவும், ளகரமாகவும், டகரமாகவும் மாறக் காண்கிறோம் பிற் காலச் சோழர் காலத்தில் ழகரம் ளகரத்தோடு மயங்கியது அதன் பின்னர்த் தென்பாண்டி நாட்டில் ளகரத்தோடு ஒன்றாகி விட்டது. நாஞ்சில் நாடும் இலங்கை நாடும் இவ்வாறே ழகரத்தை றகரத்திலும் வேறாக ஒலிக்க வில்லை. ஆழ்வார் என்பது ஆள்வார் (சுவாமி) என்று தான், முதலில் வழங்கியிருத்தல் வேண்டும் அரசர் களையும் கல்வெட்டுக்கள் ஆழ்வார் எனக் குறிப்பி டுகின்றன. வீரசோழியம் 11ஆம் நூற்றாண்டில் எழுந்த போது இந்த மாறாட்டத்தின் காரணமாக ளகரத்திற்கு உரிய சந்தி விதிகளெல்லாம் ழகரத்திற்கும் வரும் என விதிக்கின்றது (15, 18). வாழ்+நாள் >வாணாள் என இன்றும் வழங்கக் காண்கிறோம். திகழ்-சக்கரம்> திகட சக்கரம் எனக் கந்தபுராணத்தின் கடவுள் வாழ்த்தில் வந்ததைப் பலரெடுத்துக் காட்டுவர்.

ழகரம் மொழி முதலில் வாராது. முதலில் குற் றெழுத்துக்குப் பின்னாலும் ழகரமெய் வாராது மொழியின் ஈற்றில் ழகரமெய் வரும். பிற்காலத்தில் இதன்பின் உகரம் உச்சரிப்பிற்காக வரும். ஈற்றில் ழகரம் உயிர்மெய்யாக நிற்கும்போது எ, ஒ, ஒள என்பன நீங்கிய பிற ஒன்பது உயிரெழுத்தோடும் இணைந்து வருமாம். ஈகார ஊகாரங்களோடு இணைந்து ஈற்றில் இந் நாளைய வழக்கில் வருவதில்லை.

மொழிக்கு இடையே ழகர மெய்யின் பின்னர் க, ஞ, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ, என்ற மெய்யெழுத்துகள் வரும். இந்த ழகரமெய்யின் முன்னர் உயிரெழுத்தன்றி மெய் யெழுத்துகள் வருவதில்லை. ழகரத்தின் பின்னர்க் க, ச, த, ப என்பனவற்றில் ஏதேனும் இரட்டித்தும் வரும். ழகரத்தின் பின்னர் வரும் ங், ஞ, ந, ம, என்பனவற்றின் பின் முறையே க, ச, த, ப மயங்கும். ழகரம் அளபெடுக்காது; இரட்டித்தும் வாராது, ஆனால் அதன்பின் வரும் ங், ஞ, ந, ம, பழம் பாடல்களில் அளபெடுத்து வரும்.