பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

த. கோவேந்தன்


அமைக்கப்பெற்றவை என்பதும், அவ் வட்டெழுத்தின் திருந்திய வடிவங்களே இப்போதுள்ள தமிழ் எழுத்துகள் என்பதும் உணரற்பாலவாம். எனவே, தமிழ் எழுத்துகள் தமிழ் நாட்டிலேயே தோன்றிய தனி எழுத்துகள் ஆகும்

தமிழ் இலக்கணங்களில் ஒன்றாகிய நன்னூலில் ஒலியைக்கொண்டு சொல்லப்பட்ட முதல் எழுத்துகள், சார்பெழுத்துகள் ஆகியவற்றின் தொகை முந்நூற்றறு பத்தொன்பது வரிவடிவங்களைக் கொண்டு நோக்கு மிடத்து, உயிர்பன்னிரண்டும் மெய்பதினெட்டும் உயிர்மெய் இருநூற்றுப் பதினாறும் ஆய்தம் ஒன்றுமாகத் தமிழ் எழுத்துகளின் தொகை இருநூற்று நாற்பத்தேழாகும்

தமிழ் எழுத்துகள் அகர முதல் னகர இறுதியாக, இக் காலத்து நெடுங்கணக்கினுள் காணப்படுவது போன்றே, தொல்காப்பியனார் காலத்தும் முறைப்பட எழுதப் பெற்று வழங்கிவந்தன. இச் செய்தி தொல்காப்பிய முதற்குத்திரத்தால் நன்கு விளங்கும் அகர முதலிய பன்னிரண்டு உயிரெழுத்துகளும் பிற எழுத்தின் உதவியின்றித் தனித்து ஒலிப்பனவாதலாலும் ககர முதலிய பதினெட்டு மெய்களும் அகர முதலிய உயிரெழுத்துக்களோடு கூடி ஒலிப்பதல்லது தனித் தொலிக்கும் ஆற்றல் இல்லாதனவாதலாலும், உயிர் எழுத்துகள் முன்னும் மெய்யெழுத்துகள் பின்னுமாக வைக்கப்பட்டுள்ளன உயிரெழுத்துகள் அகர முதல் ஒளகாரம் இறுதியாக எழுதப்படுதற்கும், மெய் எழுத்துகள் ககர முதல் னகர இறுதியாக எழுதப் படுதற்கும், ஏற்ற காரணங்களை ஆசிரியர் சிவஞான முனிவர் தம் தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தியுள் விளங்கக் கூறியுள்ளனர். ஒலியின் பிறப்பு முறைக்கும் ஏற்பத் தமிழ் எழுத்துகள் அகர முதல் னகரம் ஈறாக வரிசைப் படுத்தப்பட்டிருக்கின்றன