பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

காசத்திற்கு

கடல் நுரையை இரண்டு விராட்டிகளுக்கு இடையில் வைத்துத் தீ வைத்துவிட்டால் பஸ்பமாகிவிடும். அதை இரண்டு விரல்களால் எடுத்துத் தேனிற் குழைத்துக் கொடுத்தால், கஷயம், காசம், இழுப்பு முதலியன விலகும். மூன்றே வேளை மருந்து போதும், புகை பிடித்தல், புளி, காரம் கூடாது.

நெஞ்சுச் சளிக்கு

விரலி மஞ்சளை விளக்கிற் காட்டிச் சுட்டு, அதன் புகையை மூக்கின் வழியாக உறிஞ்ச, நெஞ்சுச் சளி, தலை வலி முதலியன நீங்கும்.

கக்குவான் நோய்க்கு

1. இந்நோய் வந்த பிள்ளைகள் அதிகமாக வருந்தித் துன்பமடைவர். இது ஒர் ஒட்டுவாரொட்டி நோயாகும். இருமும் பிள்ளைகளின் காற்று வாடையிலிருந்தாலும் இந்நோய் ஒட்டிக்கொள்ளும். இந்நோய்க்கு மருந்தாக முதலை உப்புக் கண்டத்தைச் சுட்டுத் தின்னச்செய்வது நமது நாட்டு வழக்கம். இது ஒரு நல்ல மருந்துதான். என்றாலும், இந் நோய்க்கு அறுபதுநாள் அதிகாரம் செய்யும் ஆற்றல் இருக்கிறது.

2. காதறுந்த மிகப்பழைய செருப்பின் தோலைச் சுட்டுச் சாம்பலாக்கிக் கொள்ளுங்கள். அதேபோல, முற்றின வேப்பமரத்துப் பட்டையிலுள்ள மேல் தோலை மட்டும் சுட்டுச் சாம்பலாக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சரி பங்காக எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். வேளை ஒன்றுக்குக் காசளவு எடுத்துத் தேனிற் குழைத்து உட்கொள்ளச் செய்யுங்கள். காலையும் மாலையும் மூன்று நாள் மட்டும் கொடுக்கவும், இடையில் ஒரு வாரம் விட்டு மறுபடியும் மூன்றுநாள் கொடுக்கவும்.