பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

பதினைந்தாம் நாளிலேயே குணங்காணலாம். குழந்தைகளுக்குப் பத்தியம் ஏதும் இல்லை.

3. மூன்று அவுன்ஸ் தூதுவளைச் சாற்றில், 1 அவுன்ஸ் பசுநெய் சேர்த்து 1/2 விராகனிடை கோஷ்டத்தைத் தட்டிப் போட்டுப் பதமாகக் காய்ச்சி வடித்துக் கொண்டு. காலை மாலை ஒரு தேக்கரண்டி வடித்துக் கொடுக்கவும். விரைவிற் குணப்படும். பத்தியமில்லை.

4. ஆமை ஒட்டையும், வீட்டு மிளகையும், மயில் இறகையும் தனித்தனியே சுட்டுச் சாம்பலாக்கிக் கலந்து காசு அளவு தேனில் குழைத்துக் கொடுக்கவும். பத்தியம் இல்லை.

கவம் விலக

1. தும்பைப் பூ சிலவற்றையும், வேப்பங் குச்சியை பூப்போலச் சீவிக்கொஞ்சம் சேர்த்தும் ஒரு பொட்டலமாகக் கட்டி ஊறப்போட்ட பிள்ளைப்பாலைச் சொட்டுச் சொட்டாகக் கொடுக்க, தொண்டையிற் கட்டியுள்ள கவக்கட்டு, நீங்கிக் குணமாகும். கவம் விலக இதைவிடச் சிறந்த மருந்து வேறில்லை.

2. வெள்ளைக் காகரணம் விதையைக் கொண்டு வந்து ஒரு விதையிற் பாதியை மட்டும் எடுத்து வெந்நீர் விட்டுச் சந்தனக்கல்லில் இழைத்துக் கொடுக்க, குழந்தைகளின் கோழை, கவக்கட்டு, மலக்கட்டு முதலியவை நீங்கும். அன்று தாய்க்குப் புளி யாகாது.

கண் வலி

1. நந்தியாவட்டப் பூவைக் கொண்டு வந்து கசக்கிக் கண்களுக்கு இரண்டு சொட்டுச் சாறுவிடக் கண்களிலுள்ள பிணிகள் நீங்கும்.

2. கண்வலி உள்ளவர்கள் பூவை மட்டும் கண்களில் ஒத்திக்கொண்டிருந்தால் போதுமானது.