பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

காக்கை கைகொட்டிச் சிரித்தது.

நரி அடங்காக் கோபத்துடன் காகத்தை, அண்ணாந்து நோக்கிற்று.

மீண்டும் நகைத்தது காக்கை. பின்னர், “கா கா, கா!” என்று கூவியது.

அவ்வளவுதான்; காக்கைக் கும்பல் கூடி விட்டது. எல்லோரும் அந்த முறுக்கைப் பகிர்ந்து உண்டன.

“நரியாரே! பார்த்தாயா எங்கள் பண்பாட்டினை?...கூடி உண்டு வாழ்வதுதான் எங்கள் குல வழக்கம், உன்னைப் போலத் தனித்திருந்து புசிப்பது எங்களுக்கு நாகரீகமாகப்படுவது கிடையாது! உலகம் அறியாதவன் நீ! ஆனால் எங்களை அறிந்தது இவ்வுலகம்!...அதனால்தான், ‘காக்கை குருவி எங்கள் ஜாதி!’ என்று அமரகவி பாடிச் சென்றிருக்கிறான்!” என்று பெருமையோடு பேசி யது காக்கை.

காக்கைக் கூட்டம் கைகொட்டிச் சிரித்தது!

இனியும் அங்கு நிற்க, மாட்சிமை தங்கிய அந்த நரி ராஜாவுக்குப் பைத்தியமா பிடித்திருக்கின்றது?