பக்கம்:தாஷ்கண்ட் வீடு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


“கண்டாயா, என்னுடைய மகிமையை? என்னுடைய அழகின் ஒளியைப் பார்த்தாயா? நீயும் தான் இருக்கிறாயே, கொஞ்சம்கூட வெளிச்சம் தெரியாமல்—உன் இருப்பிடத்தைக் காட்டக்கூட வகையற்று!...ப்பூ!...” என்று மத்தாப்பு எக்காளமிட்டுச் சிரித்தபடி, அகலைக் கேலி செய்தது.

சிறுவர்—சிறுமியர்கள் செய்த ஏளனம் போதாதென்று, மத்தாப்பூவும் கேலி செய்தது அகல் விளக்கின் துயரத்தைப் பன்மடங்காக்கிற்று. அதன் கண்கள் கலங்கின. ஆனாலும், அது பெருமூச்சை மட்டும் வெளியேற்றிவிட்டு, 'கம்'மென்று பொறுமை பூண்டு இருந்தது. தன்னுடைய அடங்கிய—அளவான—மங்கிய ஒளியை தனக்குத் தானே ஒருமுறை நோக்கிக் கொண்டது. பின்னர், நமட்டுச் சிரிப்பொன்றைச் சிரித்துக் கொண்டது—ஆமாம், தனக்குள்ளே தான்!

அடுத்த கணம், என்ன நடந்தது, தெரியுமா?

கூத்தும் கொம்மாளமும் அடங்கின.

சிரிப்பும் விளையாட்டும் நின்றன.

ஏனென்று இன்னுமா உங்களுக்கு விளங்கவில்லை?

சரிதான் போங்கள்?

அடடே, போய் விடாதீர்கள்!

பாக்கிக் கதையைக் கேளுங்கள்