பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடியும் குறளும்

41


இடதுபுறம் இரண்டையும் கொண்டு, பெரும் பாவங்களுக்கு எல்லாம் நடுநாயகமாய் விளங்கிக் கொண்டிருப்பது வியப்புக்குரியது.

‘பொய், கொலை, களவு, காமத்தைவிடக் கள் அருந்துவது அவ்வளவு கொடியதா?’ என்ற ஐயம் சிலருக்கு உண்டாகலாம். அவர்கள் அறிய வேண்டியது இது, மற்ற நான்கு பெரும் பாவச் செயல்களையும் செய்யப் பிறர் எவராவது துணை இருந்து தீரவேண்டும். பிறர் சேராமல் அவை நான்கும் நடவாது. ஆனால் குடி ஒன்றுமட்டும் தனித்து நடக்கக் கூடியது.

மற்றொன்று; பொய் அச்சத்தாலும், கொலை ஆத்திரத்தாலும், களவு வறுமையாலும், காமம் பருவத்தாலும் நேரிட்டு விடலாம். ஆனால் கள் அருந்துவது இதில் எதனாலுமின்றி நிகழக்கூடியது.

இன்னுமொன்று : ஐம்பெரும் பாவச் செயல்களில் எதையும் செய்ய விரும்பாத ஒருவன் அறிவிழந்து குடிக்கப் பழகி விடுவானானால், காலப்போக்கில் பிறபாவச்செயல்களைச் செய்யும் பழக்கமும் அவனுக்கு மிக எளிதாக வந்து விடும். “உலகில் நடைபெற்ற குற்றங்களில் 100க்கு 81 வீதம் குடிகாரர்களாலேயே நடைபெற்றிருக்கின்றன” என்ற உலகப் புள்ளி விவரங்களால் இவ்வுண்மையை நன்கு அறியலாம்.

குடி, ஏன் இவ்வாறு அதிகமாக வெறுக்கப்படுகிறது? என்பது ஒரு கேள்வி. ‘குடிகாரன் குடித்ததும் முதலில் தன் அறிவை இழந்து விடுகிறான்; அடுத்து அறச்செயல்களை இழந்து விடுகிறான்; அதனால் அவன் குடும்பப் பொறுப்புக்களை இழந்து விடுகிறான்; பிறகு குடும்பம் அவனை இழந்து விடுகிறது. கடைசியாக நாடும் இழந்து நல்லவர்களும் அவனை இழந்து விடுகிறார்கள். இவற்றால் வாழப் பிறந்த அவன் தன் வாழ்வையே இழந்துவிடுகிறான்’ என்பவைகளே அதற்கு விடை.