பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

திருக்குறள் கட்டுரைகள்


இவை அனைத்தையும் எண்ணித்தான் நமது முன்னோர்கள், “குடிக்காதே குடிப்பது அறமல்ல; அது பாவச் செயல்களில் ஒன்று” எனக் கூறி இருக்கின்றனர். இன்றுங் கூடப் பேரறிஞர்கள் பலர் கூறி வருகின்றனர். குடிப் பழக்கம் உடைய ஒருவனைச் சமூகத்தில் இருந்தும் கூட்டங்களிலிருந்தும் நீக்கிவைக்கும் பழக்கம் ஒன்று தமிழ் நாட்டில் உள்ள பெரும்பான்மையான சிற்றுார்களில் இருந்து வந்திருக்கிறது. இதிலிருந்து குடியைத் தமிழ்ப் பெருமக்கள் எவ்வளவு தூரம் வெறுத்து வந்திருக்கின்றனர் என்பது நன்கு விளங்கும்.

1998 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிப் தமிழ்ப் பேரறிஞர் ஆகிய திருவள்ளுவர் இது குறித்து என்ன கூறியிருக்கிறார் என்பதைப் பாருங்கள். எல்லோரையும் நோக்கி நீதி கூறிய வள்ளுவர் குடிகாரனை நோக்கி நீதி கூறவில்லை. கூற விரும்பவும் இல்லை. ஏனெனில், “கள்ளுண்டு வெறித்த ஒருவனிடம் போய் அவனது செயல் தவறு எனக் காரணங்களை எடுத்துக்கூறி அவனைத் திருத்தி விடலாம் என எவரேனும் நினைப்பார்களானால் அது தண்ணிரில் மூழ்கிய ஒருவனை விளக்குக்கொண்டு தேடிக்கண்டு பிடிக்கும் வீண் செயலுக்கு ஒப்பாக இருக்கும்” என்பது அவரது கருத்து.

களித்தானைக் காரணங் காட்டுதல் நீருட்
குளித்தானைத் தீத்துரீ யற்று.

என்பது அவர் வாக்கு.

இவ்வாறு முடிவுகட்டியிருக்கின்ற பெரியார்கூட இரக்க மனங்கொண்டு, குடிகாரர்களுக்கு சில நீதிகளைக் கூறியிருக்கிறார். ஆனால், அவர் குடிகாரர்களிடம் போய்க் கூறவில்லை. நம்மிடம் வந்துதான் கூறுகிறார். அதுவுங் கேள்விகளாக, அவர் நம்மை நோக்கிக் கேட்குங் கேள்விகள் மூன்று: