பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



10

திருக்குறள் புதைபொருள்

பெறமுடியாத சிறப்பை, ஒருவன் ஒழுக்கம் ஒன்றினால் பெறலாம் என்பதை "ஒழுக்கம் விழுப்பம் தரும்" என்ற சொற்கள் நமக்கு அறிவித்துக்கொண்டிருக்கின்றன.

மக்களாய்ப் பிறந்து, மக்களாய் வாழ்ந்து, மக்களாகவே மடிய விரும்பும் எவரும், ஒழுக்கத்தைப்போற்றி வளர்த்துக் காப்பாற்றக் கடமைப்பட்டவர் என்பதை "ஓம்பப்படும்" என்ற சொற்களால் வள்ளுவர் வற்புறுத்திக் கூறியிருக்கிறார்.

கடமை! ஒழுக்கத்தைக் காப்பாற்ற வேண்டியது கடமைதான் என்றாலும், நிழல் தரும் என்றே மரம் வளர்க்கப்படுவதையும், பலன் தரும் என்றே பயிர் வளர்க்கப்படுவதையும், பால் தரும் என்றே பசு வளர்க்கப் படுவதையும் கண்ட வள்ளுவர், 'அப்படிப்பட்ட மக்களிடத்தில் எதுவும் தராத கடமையைச் சொல்லி என்ன பயன்?' என்ற புண்பட்ட மனத்துடன் ஆராய்ந்து, பிறகே "விழுப்பம் தரும் ஓம்பு" என்று பலனையும் சுட்டிக் கூறியிருப்பதாகத் தெரியவருகிறது.

இக் குறளில் இவ்வளவு கூறியும் அவர் மனம் அமைதியடையவில்லை. இதற்குள் ஓர் உவமையும் கூறவேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார். பொன்னை, பொருளை, மனைவியை, ம க் க ளை க் காப்பாற்றுவதைப்போல ஒழுக்கத்தையும் காப்பாற்ற வேண்டும் எனக் கூற எண்ணியும், இவற்றுள் எதை இழந்தாலும் திரும்பப் பெறமுடியுமே, ஒழுக்கத்தை இழந்து விட்டால் திரும்பப் பெற முடியாதே என நினைத்து, இவற்றுள் எதையும் உவமையாகக் கூறவில்லை என்று தெரிகிறது.

இவ்வுலகில் இழந்தால் திரும்பப் பெற முடியாதவை இரண்டு. ஒன்று ஒழுக்கம்; மற்றொன்று உயிர். ஆதலால், போனால் திரும்பி வராத ஒழுக்கத்திற்கு உவமை கூற எண்ணிய வள்ளுவர், போனால் திரும்பி வராத உயிரைத் தேடிப் பிடித்து வந்து உவமையாகக் கூறியிருப்பது எண்ணி எண்ணி வியக்கக்கூடியதாகும்.