பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிலமென்னும் நல்லாள்

27

என்பதை இக்குறள் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டிருக்கிறது.

உழுது உண்டு வாழ நிலங்கள் இருக்கின்றபொழுது, ஒருவன் தனக்குப் பொருளில்லையென்றாவது, வேலையில்லை என்றாவது கூறிக்கொண்டு வறுமை வாழ்வு வாழ்வது இழிவு, அது ஏளனத்திற்குரியது என்பது இக் குறளின் முடிவு.

அத்தகைய இழிந்த வாழ்வு வாழும் மக்களைக் கண்டு, நல்வாழ்வு வாழும் மக்கள் நகைப்பார்கள் என்று கூறினால் நன்மக்கட்குப் பழி வந்துவிடக் கூடும். ஆதலின் அதை விடுத்து இறுதியாக அந்த நிலமே நகைக்கும் எனக் கூறியிருக்கவேண்டுமெனத் தோன்றுகிறது.

'நிலம் நகும்’ என்பதிலுங்கூட நிலத்தை ஒரு பெண்ணாக உவமித்து, நிலப்பெண் சிரிப்பாள் என்று கூறி வள்ளுவரும் அந்த நகைப்பில் பங்குபெற்று நகைப்பது நமக்கும்கூட நகைப்பை உண்டாக்கிவிடுகிறது.

ஆண்மகனுக்குத் தன்மான உணர்ச்சியையூட்டும் ஒரு வழி உன் செயலைக்கண்டு பெண்பிள்ளை சிரிப்பாள் என்பது தான் என்பதை வள்ளுவர் அக்காலத்திலேயே அறிந்து இக் குறளில் புகுத்தியிருப்பது நமக்குப் பெருவியப்பை அளிக்கிறது.

பெண் மக்களிலும்கூடக் கெட்ட பெண்கள் அல்லாத நல்ல பெண்களே எள்ளி நகையாடுவர் என்பதை ‘நல்லாள் நகும்’ என்ற சொற்கள் நமக்கு அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

‘நல்லாள்’ என்ற சொல்லுக்கு நலமுடையவள், அழகுடையவள், ஒழுக்கமுடையவள் என்பதோடு, இல்லாள் என்றும் பொருள் கொள்ளலாம். இக்குறளுக்கு முன்னுள்ள குறளில், ‘இல்லாளின் ஊடிவிடும்’ என்றார். இக்குறளில் ‘இல்லாள் நகைத்துவிடுவாள்’ என்றும் கூறுகிறார்.

தன்னைத் தழுவி மகிழ்வித்து மகிழ்ந்து வாழ விரும்பாத கணவனைக் கண்டு இல்லாள் வெம்பி உளம் புழுங்கிக் குறு