பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

என்ற சொல்லுக்கும், 'உடுக்கை யிழந்தவன் கைபோல' என்ற இடத்து வரும் "இழந்தவன்" என்ற சொல்லுக்கும் திரு. விசுவநாதம் தந்திருக்கும் விளக்கங்கள் பாராட்டத் தக்கவை.

பதசாரம் எழுதுதலில் பரிமேலழகர் அழகர் என்பார்கள். ஆயினும் இந்நூலில் காட்டப்படும் புதை பொருள் விளக்கத்தை உற்று நோக்குவோர்க்கு இவ்வாசிரியர் பரிமேலழகரை விஞ்சிவிட்டார் என்பது புலப்படும்.

திருக்குறட் சுரங்கத்துட் புகுந்து, பன்னிரண்டு பாளங்களை எடுத்துவந்து, அவற்றின் சிந்தைக்கினிய அழகினைச் செவ்விதின் எடுத்துக் காட்டியுள்ள திரு. விசுவநாதனாருக்குத் தமிழுலகு கடப்பாடுடையது. அவர் மென்மேலும் இவைபோன்ற நுண்பொருள்களைத் தோண்டி எடுத்துத் தருதல் வேண்டுமென விழைகின்றேன். பலரும் இதைப் படித்துப் பயன்பெறுவது நல்லது.

அண்ணாமலை நகர்

தங்கள்,

18--6-1956

அ. சிதம்பரநாதன்