பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கூறுவதன் மூலம் என்னென்ன விளைவுகள் உண்டாகும் என்பதையும் இக்குறள் நம்மை எண்ணிப்பார்க்கும்படி செய்கிறது.

புறங்கூறும் மக்களை வள்ளுவர் தமக்கு அறிமுகம் செய்துவைக்கும் சொல்லே ஒரு நல்ல சொல். அது கொடியர், தீயர், பொய்யர், வஞ்சகர், பொறாமையாளர் என்பதல்ல; அது "அறியாதவர்" என்பதே, இதனை இக்குறளின் ஈற்றிலுள்ள "தேற்றாதவர்" என்ற சொல்லால் அறியலாம். இது அவரது பண்பட்ட உள்ளத்தையே நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது.

அறியாதவரைக் காட்டுவதிலும், "நகச்சொல்லி நட்பாடலை அறியாதவர்" என விளக்கத்தோடு காட்டுகிறார். நட்பாடல் என்பது நட்புக்கொள்ளுதல் என்றும், நகச்சொல்லுதல் என்பது பிறர் மகிழும்படி சொல்லுதல் என்றும் ஆகும். எனவே, புறங்கூறும் கொடுமையானது பிறரை நட்புக்கொள்ளத் தெரியாதவரின் செயல் என இக்குறள் கூறுவது ஒரு பெரிய உண்மையை வெளியிடுவதாகவும் காணப்படுகிறது.

"தேற்றாதவர்" என்ற சொல்லின் பொருள், ஒன்றுமே தெரியாதவர், எதையுமே அறியாதவர் என்பதல்ல; "தெரிந்தும் அதைச் செய்ய அறியாதவர்" என்றே ஆகும்.

பிறர் மகிழும்படி இனிய சொற்களைச் சொல்லி நட்புக்கொள்ளத் தெரியாதவர்களே, பிறர் வெறுக்கும் படி புறங்கூறிச் சுற்றத்தார்களையும் பகைத்துக் கொள்வர் என்பதே இக்குறள் முழுவதும் பரவி நிற்கும் கருத்தாகும்.