பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்கின்றார். இதனால் இவர்தம் பரந்து பட்ட இலக்கியப் புலமையும், பாத்திரங்களின் இயல்புகளைத் திறனாய்வு செய்யும் தெளிவும் தெரிய வருகின்றன.

‘தெரிந்து தெளிதல்” என்னும் அதிகாரத்தில் வியாசர் மதம், மகேச்சுரர் மதம், நாரதர் மதம், என்பனபோன்று பல்வேறு கோட்பாடுகளைச் சுட்டிச் செல்கின்றார். இதனால் இவர்தம் வடமொழி அறிவு நன்கு புலப்படும். மேலும் திருக்குறளுக்குப் பல்வேறு இடங்களில் நயவுரை எழுதிச் செல்கின்றார்.

இந்நிலையில் திருக்குறள் அறக்கட்டளையின் கீழ் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் பரிப்பெருமாள் உரையைப் பதிப்பிக்கச் கருதி இப்பொழுது இப்பதிப்பினைக் கொண்டு வருகின்றது. பரிப்பெருமாள் உரை அச்சில் வெளியானவற்றையும், எட்டில் உள்ள. வற்றையும் ஒப்பிட்டு விடுபட்டவைகள் இணைக்கப்பெற்றுள்ளன. தவறாக உள்ளவை திருத்தப்பெற்றுள்ளன. முறைமாறிக் கிடந்தவை ஒழுங்கு படுத்தப் பெற்றுள்ளன.

இப்பதிப்புப் பணியினை ஏற்றுப் பணியாற்றியவர் திரு.கா.ம. வேங்கடராமையா எம். ஏ., அவர்கள் ஆவர். இவர்கள் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பல்லாண்டுகள் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றியவர்கள். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் திருக்குறள் இருக்கையில் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய காலை இப்பதிப்புப்பணியினை மேற்கொண்டனர். அப்பணி இப்பொழுது அச்சுவடிவம் பெற்று அழகிய நூலாக வெளிவருவது தமிழ்மக்களால் வரவேற்கப்பெறும் என்று நம்புகிறேன். முயற்சியும் உழைப்புமிக்க நூலாசிரியரின் பணி பாராட்டத்தக்கது. பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தமது அறுபதாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் இவ்வாண்டில் இந்நூல் வெளிவருவது சாலச் சிறந்தது.

தமிழ் வளர்ச்சி கருதி இப்பல்கலைக் கழகத்தைத் தோற்று வித்த பெருங்கொடை வள்ளல் அரசர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களும், அவர்தம் அருமை மைந்தர் அமரர் முத்தையவேள் அவர்களும் நமது வணக்கத்திற்குரியவர்கள். நம் மதிப்பிற்குரிய இணை வேந்தர் டாக்டர். எம். ஏ. எம். இராமசாமி அவர்கள் தமிழுக்கும் தமிழிசைக்கும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.