பக்கம்:திருவருட் பயன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



18

விளக்கம்: தமக்குமேலாய் நின்று முதல்வன் அறிவிக்க அறியுந் தன்மையனவாகிய உயிர்களைப்போன்று தனக்கு மேலாய் நின்று அறிவிக்குந் தலைவனாகத் தன்னின்மிக்கார் இல்லாத தனிமுதல்வனே இறைவன் என்பது உணர்த்துகின்றது, பல் ஆர் உயிர் - பலவாய் நிறைந்த உயிர்கள். உணரும் பான்மையாவது தமக்குமேலாய் நின்று இறைவன் அறிவிக்க அறியுந்தன்மை.

ஒரு பொருளுக்கு எடுத்துக் காட்டப்படும் உவமை அப் பொருளோடு ஒத்ததாகிய 'ஒப்பு' எனவும், அப்பொருளின் மிக்கதாகிய 'உவமன்' எனவும் இருதிறப்படும். இறைவன் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்பதனைத் 'தனக் குவமையில்லாதான்’ (திருக்குறள்-7) என்ற தொடரால் திருவள்ளுவர் தொகுத்துக் கூறியுள்ளார். அவர் கூறிய இத் தொடர்ப்பொருளை அடியொற்றி இறைவனுக்கு ஒப்பின்மையை இவ்வதிகாரத்து மூன்றாங்குறளாலும், உவமன் இன்மையை ஆறாங்குறளாகிய இதனாலும் இந்நூலாசிரியர் பகுத்துணர்த்தினார். இவற்றால் ஒப்புடையனல்லன். ‘ஒருவமனில்லி’ என்னுந் திருமுறைத் தொடர்ப் பொருளை விளக்கினாராயிற்று. உயிர்களெல்லாம் இறைவன் உடன் நின்றுணர்த்த உணர்ந்து உய்யுந்தன்மையன. இறைவனோ தனக்கு மேலாய் உடன் நின்று உணர்த்துவோர் யாருமின்றித் தானே முழுதுணர்ந்து உயிர்கட்கு உணர்த்தி உய்விப்போன் தானொருவனேயாகத் திகழும் தனிமுதல்வன் என்பார், "பல் ஆருயிர் உணரும்பான்மையென மேல் ஒருவன் இல்லாதான்" என்றார்.

இங்ஙனம் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி உயிர் கட்கு நலம் புரியும் இறைவன் எவ்விடத்துள்ளான் என வினவிய மாணாக்கர்க்கு விடை கூறுவதாக அமைந்தது அடுத்து வரும் குறட்பாவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/41&oldid=514388" இலிருந்து மீள்விக்கப்பட்டது