பக்கம்:திருவருட் பயன்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

நான்காம் வேற்றுமையுருபும் விகாரத்தால் தொக்கன. 'கூகையின் கண்ணுக்கு ஞாயிற்றினொளி இருளானற்போல, நிலைபெற்ற ஞானக்கண்ணினாலே காணாத ஆன்மாக்களுக்கு ஞானமும் அஞ்ஞானமாயிருக்கும்’ என்றவாறு.

இறைவனது திருவருளாகிய ஒளி, ஆன்மாவோடும் அநாதியே கூடியிருக்கச் செய்தேயும், மலபாகம் வாராத உயிர்களுக்குச் சிவஞானம் பிரகாசியாதென்பதாம்.

எங்குமாய் விரிந்து பரவிய இறைவனது அருளொளியினாற் சூழப்பட்டிருந்தும் அதனியல்பினை உள்ளவாறுணர முடியாது ஆணவ இருளிற் சிக்குண்டு அலமரும் ஆன்மாக்களின் துன்ப நிலையினை,

"'மாயத்தை யுணரமாட்டேன் மையல்கொள் மனத்தனாகிப்
  பேயொத்துக் கூகையானேன்’’ - (4–31–7)

எனத் தம்மேல் வைத்துப் புலப்படுத்தியருளினர் திருநாவுக்கரசர். கூகைக்குப் பகற்காலத்திற் கண்தெரியா தென்பதனை,

'பகல் வெல்லுங் கூகையைக் காக்கை' (திருக்-481) என வரும் திருக்குறளில் திருவள்ளுவர் எடுத்தாண்டுள்ளமை இங்கு ஒப்புநோக்கத் தகுவதாகும்.

இவ்வாறு உயிர்க்குயிராகிய இறைவனை உணரவொட்டாது ஆன்மாக்களினறிவை மறைத்துள்ள அஞ்ஞானமாகிய இருள் தொலைவது என்று? என ஏக்கற்று வினவிய மாணாக்கர்க்கு, உயிர்களை அனாதியேபற்றியுள்ள அறியாமைப் பிணிப்பின் தொன்மையினை அறிவுறுத்துவதாக அமைந்தது, அடுத்து வரும் குறட்பாவாகும்.

       20. அன்றளவும் ஆற்றுமுயிர் அந்தோ அருள்தெரிவ
           தென்றளவொன் றில்லா இடர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திருவருட்_பயன்.pdf/68&oldid=514499" இலிருந்து மீள்விக்கப்பட்டது