பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சிவமயம்

திருச்சிற்றம்பலம்


திருவியலுர் உய்யவந்த தேவநாயனார் அருளிச்செய்த

திருவுந்தியார்


திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் அருளிச்செய்த

திருக்களிற்றுப்படியார்

மூலமும் உரையும்


உரைப்பாயிரம்


சிவயோகியாராகிய திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் தாம் இயற்றியருளிய திருவுந்தியார் என்னும் மெய்ந்நூற் பொருளைத் தம் மாணவர் ஆளுடைய தேவநாயனார்க்கு உபதேசித்தருளினார். ஆளுடைய தேவநாயனார் தாம் கேட்ட மெய்ந்நூற் பொருளைத் தம் மாணவர் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார்க்கு உபதேசித்தருளினார். திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் தாம் பெற்ற திருவுந்தியார் உபதேசப்பொருளைத் தில்லையில் வாழ்ந்த தம்முடைய மாணவர்க்கு விரித்துணர்த்தும் முறையில் திருவுந்தியாரின் விளக்கவுரையாகத் திருக்களிற்றுப்படியார் என்னும் மெய்ந்நூலை இயற்றியருளினார் என்பது வரலாறு.


சிவநெறிப்பனுவல்களாகிய பன்னிரு திருமுறைகளின் பயனாகத் தோன்றிய மெய்கண்ட நூல்கள் பதினான்கினுள் காலத்தாலும் உபதேச வழிமுறையினாலும் முதற்கண் வைத்து எண்ணப்பெறுவன திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூல்களேயாகும். இவற்றுள் திருவுந்தியார் என்னும் முதல் நூற் பொருளைப் பிறழாது விரித்து விளக்கும் முறையில் அந்நூலுக்குச் செய்யுள் வடிவில் இயன்ற விளக்கவுரையாகத் திகழ்வது திருக்களிற்றுப்படியாராகும்; வழிநூலாகிய அதனை அடிப்படையாகக் கொண்டு அதன் முதல் நூலாகிய திருவுந்தியாருக்கு உரை காணுதல் திருமூல நாயனர் கால முதலாக உபதேச வழிமுறையில் தொடர்ந்து வரும் சைவ சித்தாந்த நுண்பொருள்களைப் பிறழாது உணர்தற்குரிய உரைநெறியாகும் எனக்கொண்டு திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் என்னும் இவ்விரு நூல்களையும் மூலமும் உரையுமாக இயைத்துப் பொருள் காணும் முறையில் இயல்வது இவ்வுரையாகும்.