பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல்வந்த வரன்முறை

3


போற்றப்பெறுகின்றது. இவ்வாறு தனிமுதற் பொருளாகிய ஒன்றையே சத்தியும் சிவமுமாக இருதன்மையதாக எண்ணிப் போற்றி வழிபடுதல் என்பது நம் நாட்டில் தொன்றுதொட்டு வரும் வழிபாட்டு மரபாகும். இத்தொன்மைமரபு, “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” எனவரும் ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்துப் பாடலிலும், ‘பெண்ணுரு ஒருதிறனாகின்று’ எனவரும் புறநானூற்றுக் கடவுள் வாழ்த்திலும், ‘ஆதிபகவன்’ எனவரும் திருக்குறள் கடவுள் வாழ்த்திலும் இடம்பெற்றுள்ளமை காணலாம். ‘சத்தியுள் ஆதியோர் தையல் பங்கன்’ (1-115-4) எனவும், ‘உமைபாகந் தோய்பகவா’ (3-1-6) எனவும் வரும் ஆளுடையபிள்ளையார் அருளுரைகள் திருக்குறளில் உள்ள ‘ஆதிபகவன்’ என்னும் பெயர்க்குரிய விளக்கமாக அமைந்தனவாகும். எனவே ஆதிபகவன் என்பது ஆதியாகிய சத்தியொடு பிரிப்பின்றி ஒன்றாயுள்ளவன் என்ற பொருளில் இறைவனுக்கு வழங்கும் திருப்பெயர் என்பது நன்கு புலனாகும். எப்பொருள்களிலும் நீக்கமறக் கலந்தும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி அப்பாற்பட்டு விளங்கும் இறைவன் சத்தியுஞ் சிவமுமாய்ப் பிரிவற நின்றே உலகினைப் படைத்துக் காத்து ஒடுக்கி மறைத்து அருள்புரிகின்றான் என்பது, ‘தன்னிற் பிரிவிலா எங்கோமான்’ (திருவெம்பாவை) எனவும், ‘எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்’ (சித்தியார்-சுபக். 165) எனவும் வரும் ஆன்றோருரைகளால் இனிதுணரப்படும். இவ்வாறு தனிமுதல்வனாகிய இறைவன் தனது ஒருமையில் சத்தியும் சிவமும் என இருமைத் தன்மையனாய் அம்மை யப்பராக வந்து உயிர்களுக்கு அருள்புரியுந் திறத்தினையுணரப்பெற்ற செம்புலச் செல்வராகிய திருவாதவூரடிகள் ‘அம்மையே யப்பா ஒப்பிலா மணியே’ என உளமுருகிப் போற்றியதுடன் தாம் கண்ட தெய்வக் காட்சியினத்,

‘தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ’


எனவரும் திருப்பாடலில் விளக்கியுள்ளமையும்,சீகாழிப் பதியில் பிரம தீர்த்தக்கரையில் நின்றுகொண்டு திருத்தோணிச் சிகரம் பார்த்து, ‘அம்மே அப்பா’ என அழுதருளிய கவுணியப் பிள்ளையார்க்கு இறைவன் அம்மையப்பராக விடைமேல் தோன்றிச் சிவஞானப் பாலினை அருத்தியருளிய அருட்செயலும், இவ்வாறே திருத்தொண்டத் தொகையடியார் பலர்க்கும் அம்மையப்பராகத் தோன்றியருளிய திருவருட் செயல்களும் திருத்தொண்டர்புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றுள்ளமையும் இங்கு உளங்கொளத் தக்கனவாகும்.